இரவு நேரம்… வழி மறித்த 10 பேர் கொண்ட கும்பல்… ஓடஓட விரட்டி கொல்லப்பட்ட ரவுடி!- 5 மாதங்களுக்கு பிறகு பழி தீர்த்த ஆட்டோ டிரைவர்

 

இரவு நேரம்… வழி மறித்த 10 பேர் கொண்ட கும்பல்… ஓடஓட விரட்டி கொல்லப்பட்ட ரவுடி!- 5 மாதங்களுக்கு பிறகு பழி தீர்த்த ஆட்டோ டிரைவர்

சென்னை கொடுங்கையூரில் ரவுடி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியைச் சேர்ந்தவர் தாமோதரன் என்கிற செல்லகுஞ்சு (31). இவர் மீது வியாசர்பாடி, எம்.கே.பி நகர் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு அருகே கடந்த 6ம் தேதி நேற்றிரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தாமோதரனை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 4 பேர், அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் தாமோதரை வெட்டினர். அவர்களிடம் தப்பிக்க தாமோதரன் ஓட்டம் பிடித்தார். ஆனால், ஓட ஓட அந்தக் கும்பல் அவரை வெட்டி சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்தக் கும்பல் பைக்கில் தப்பிச் சென்றது.

இந்தச் சம்பவம் குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, உதவி கமிஷனர் அரிக்குமார், இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் மற்றும் போலீஸார் வந்து விசாரித்தனர். பிரேத பரிசோதனைக்காக ரவுடி தாமோதரனின் சடலம் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள், கொலையாளிகள் வந்த பைக்கின் பதிவு நம்பர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், ரவுடி தாமோதரனுக்கும் வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தாமோதரன், ஆட்டோ டிரைவரை வெட்டினார். இதுதொடர்பாக வியாசர்பாடி காவல்துறையினர் தாமோதரன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆட்டோ டிரைவர் உயிர்பிழைத்தார். இந்தச் சூழலில்தான் தாமோதரன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் இந்தக் கொலையில் ஆட்டோ டிரைவரின் மீது காவல்துறையினரின் சந்தேகப்பார்வை விழுந்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகள் சிக்கினால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும்” என்றனர்.