உமிழ் நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா!!!

 

உமிழ் நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா!!!

நம்முடைய வெறுப்பை வெளிப்படுத்த உமிழ்நீரை காரித் துப்புவது வாடிக்கை. ஆனால், அந்த உமிழ்நீர் நமக்கு எந்த அளவுக்கு நன்மை செய்கிறது என்பதை என்றைக்காவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? எதற்காக இந்த உமிழ் நீர் சுரக்கிறது, அதன் பயன்பாடு என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஒருவருக்கு ஒரு நாளைக்கு 600 மி.லி-யில் இருந்து ஒரு லிட்டர் வரையில் உமிழ் நீர் சுரக்கிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க உமிழ் நீர் சுரப்பு குறையும். சிலருக்கு ஏற்படும் உலர் வாய் பிரச்னை (ஜெரோஸ்டோமியா) பாதிப்பு காரணமாகவும் வாயில் உமிழ் நீர் அளவு குறையலாம்.

உமிழ் நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா!!!

எச்சில் என்பது 99 சதவிகிதம் நீரால் ஆனது. ஒரு சதவிகிதம் என்பது பாக்டீரியா பெருக்கத்தைத் தடுக்கும், உணவை நொதிக்கச் செய்யும், செரிமானத்துக்கு உதவும் நுண் சத்துக்கள் உள்ளன.

உமிழ் நீரின் முக்கியப் பணி வாயில் உள்ள மியூக்கோஸாக்களுக்கு உராய்வால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் உராய்து தடுப்பு பொருளாக (இன்ஜின் ஆயில் போல) செயல்படுகிறது. வாயின் பிஎச் அளவை பராமரிக்க உதவுகிறது. வாயில் பாக்டீரியா செயல்பாட்டைத் தடுக்க, செரிமானத்துக்கு உதவ, குறிப்பாக கார்போஹைட்ரேட், டிரைகிளசரைட் செரிமானமாக, வாயில் ஏற்படும் புண்களை ஆற்ற, நாக்கில் உள்ள சுவை மொட்டுக்களை பாதுகாக்க பயன்படுகிறது.

பற்களைச் சிதைக்க பாக்டீரியா தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக அவை அமிலங்களை சுரக்கின்றன. அதை நீர்த்துப்போகச் செய்யும் வேலையை உமிழ் நீர்தான் செய்கிறது.

நாம் சாப்பிடும் உணவு நன்கு அரைபட, தொண்டைக் குழி வழியாக இரைப்பையை அடைய எச்சில் உதவுகிறது.

உமிழ் நீர் போதுமான அளவில் சுரக்காத போது பற்களில் பாதிப்பு, உணவை சுவைத்து உண்ண முடியாத சூழல் என பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சில வகையான மருந்துகள், வயோதிகம், புற்றுநோய் சிகிச்சை, நரம்பு மண்டல பாதிப்பு, சர்க்கரை நோய், பக்கவாதம் போன்ற நோய்கள், புகையிலை, மது பழக்கம், போதை பழக்கங்கள் காரணமாக உமிழ் நீர் சுரப்பதில் பாதிப்பு ஏற்பட்டு அது நோயாக மாறலாம்.

உமிழ் நீர் சுரப்பு குறைந்தால் வாய் உலர்ந்து போகும், சுரக்கும் எச்சில் மிகவும் கடினமானதாக இருக்கும், வாய் துர்நாற்றம் இருக்கும், உணவை மெல்ல, விழுங்க கடினமாக இருக்கும். தொண்டை காய்ந்து போவதால் எரிச்சல், புண்கள் ஏற்படும். உணவின் சுவையை அறிய முடியாத நிலை ஏற்படும்.