#IPL2021 ஆடுகளம்: மும்பை Vs பெங்களூரு பலப்பரீட்சை

 

#IPL2021 ஆடுகளம்: மும்பை Vs பெங்களூரு பலப்பரீட்சை

2021 ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை சென்னையில் துவங்குகிறது. கடந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்து 5 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில், நாளை ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும் – பெங்களூரு அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன, அதில் மும்பை 17 முறையும், பெங்களூரு 9 முறையும் வென்றுள்ளது.

முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த மைதானம் எப்போதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிற்கும் ஒத்துழைக்கும். ஏனென்றால் ஸ்பின்னர்களுக்கு மிகவும் கைக்கொடுக்கூடிய பிட்ச் இது. இதனால் இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி 160 ரன்கள் எடுத்தாலே ஓரளவிற்கு வெற்றி பெறலாம் என கடந்த கால போட்டிகளின் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

#IPL2021 ஆடுகளம்: மும்பை Vs பெங்களூரு பலப்பரீட்சை

மும்பை அணியை பொறுத்தவரை ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி. சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள், நிதானம் மற்றும் அதிரடியாக ஆடக்கூடிய நடுவரிசை வீரர்கள், சிக்சர்களாக பறக்கவிடும் ஃபினிசர்கள், இக்கட்டான நிலைமையிலும் ரன் கொடுக்காமல் விக்கெட்டை வீழ்த்தும் சிறந்த பந்து வீச்சாளர்கள் என கிரிக்கெட் ஜாம்பவான்களால் சூழப்பட்டுள்ளது மும்பை அணி. ஐபிஎல்-இன் சிறந்த அணியாகயும் மும்பை அணி கருதப்படுகிறது.

பெங்களூர் அணியை பொறுத்தவரை கடந்த சீசனில் விளையாடிய நிறைய வீரர்களை வெளியேற்றி இம்முறை புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். துவக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையாததால் விராட் கோலியே இந்த தொடரில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்க உள்ளார். நடுவரிசையை பலப்படுத்த ஏபி டிவில்லியர்ஸ் உடன் , மேக்ஸ்வெல் மற்றும் டேனியல் கிறிஸ்டினை இணைத்துள்ளனர். பந்துவீச்சை பலப்படுத்த கைல் ஜெமிசன் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் இருந்த குறைகளை தகர்த்தெறிய இந்த சீசனில் சில புதிய வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் பெங்களூர் அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை நடைபெறும் முதல் போட்டியில் மும்பை அணி வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர். ரசிகர்களைப் பொறுத்தவரை அடுத்த 50 நாட்களுக்கு கிரிக்கெட் போட்டி இருப்பதால் யார் வெற்றிப்பெற்றாலும் பரவாயில்லை ஆட்டத்தை ஆரம்பியுங்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.