`ஒவ்வொரு அரிசியா காட்டுங்க; நல்லதா பார்த்து வாங்கிக் கொள்கிறோம்!’- சென்னையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை

 

`ஒவ்வொரு அரிசியா காட்டுங்க; நல்லதா பார்த்து வாங்கிக் கொள்கிறோம்!’- சென்னையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை

அரிசி வாங்குவதுபோல் நடித்து உரிமையாளரை திசைதிருப்பி கடையில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. தப்பியோடி கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை தரமணியில் சந்திரன் என்பவர் அரிசிக் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு அரிசி வாங்க 2 பேர் வந்துள்ளனர். அப்போது, ஒவ்வொரு ரக அரிசி எடுத்துக் காட்டுங்க என்று கூறி 30 நிமிடத்திற்கு மேல் கடைக்காரை திசை திருப்பி உள்ளனர். பின்னர், வேறு வழி இல்லாமல் கடையில் உள்ள கடைசி அரிசி மூட்டையை எடுக்குமாறு கூறியுள்ளனர். மூன்று மூட்டை அரிசியை வாங்கிய அவர்கள், பணம் போதிய அளவு இல்லை எனக் கூறியதோடு, ஏ.டி.எம்-ல் பணம் எடுத்துக் கொண்டு, அரிசி மூட்டையை ஏற்றிச் செல்ல ஆட்டோவை அழைத்து வருவதாகக் கூறிச் சென்றுள்ளனர். கடை உரிமையாளர் சந்திரன், இவர்கள் வருவார்கள் என கடையை மூடாமல் இரவு 7 மணி வரை காத்திருந்துள்ளார். அவர்கள் வராதால் வாங்கிய அரிசி மூட்டையைக் கடையில் உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு, கடைசியாக கல்லா பெட்டியைப் பார்க்கும்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

`ஒவ்வொரு அரிசியா காட்டுங்க; நல்லதா பார்த்து வாங்கிக் கொள்கிறோம்!’- சென்னையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை

கல்லாவில் இருந்த 75,000 ரூபாய் பணத்தை நூதன முறையில் தன்னை ஏமாற்றி திருடிச் சென்றது அவருக்குத் தெரியவந்துள்ளது. தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த சந்திரன், அந்தப் பகுதி முழுவதும் அவர்களைத் தேடியுள்ளார். நீண்ட நேரமாகத் தேடியலைந்தும் இருவரையும் கண்டுபிடிக்க முடியாததால் தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

`கருப்புசாமி குத்தைக்காரர்’ என்ற படத்தில் நடிகர் வடிவேலு அரிசிக் கடையில் அரிசி வாங்குவது போல், கடைக்காரை ஏமாற்றி தராசு மற்றும் எடைக்கல்லைத் திருடிச் செல்லும் காமெடி காட்சி இடம்பெற்றிருக்கும். அதேபோல் சென்னையில் ஒரு சம்பவம் நடந்திருப்பது வியாபாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.