`நாங்க கவரிங் நகையைத்தான் திருடினோம்; தங்க நகையை திருடவில்லை!’- போலீஸிடம் சத்தியம் செய்த கொள்ளையர்கள்; பதறிய வீட்டு ஓனர்

 

`நாங்க கவரிங் நகையைத்தான் திருடினோம்; தங்க நகையை திருடவில்லை!’- போலீஸிடம் சத்தியம் செய்த கொள்ளையர்கள்; பதறிய வீட்டு ஓனர்

“நாங்க கவரிங் நகையைத்தான் திருடினோம்; தங்க நகையை திருடவில்லை” என்று பிடிபட்ட கொள்ளையர்கள் போலீஸிடம் சத்தியம் செய்தனர். ஆனால், நகைகளை பறிகொடுத்தவர், தங்க நகையும் இருந்தது. இதனை மீட்டு தாருங்கள் என்று கண்ணீர் மல்க கூறினார்.

`நாங்க கவரிங் நகையைத்தான் திருடினோம்; தங்க நகையை திருடவில்லை!’- போலீஸிடம் சத்தியம் செய்த கொள்ளையர்கள்; பதறிய வீட்டு ஓனர்

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் பச்சையம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வகுமார் (48). கூலி வேலை செய்து வரும் இவர், தனது மனைவி, பிள்ளைகளுடன் இரவில் வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். காலையில் எழுந்து வீட்டிற்கு சென்றபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 சவரன் நகை மற்றும் கவரிங் நகை, செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் செல்வகுமார் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர், கைரேகை நிபுணர்களை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் ராஜா (எ)குண்டன் (22) பழைய குற்றவாளியின் கைரேகை ஒத்துப்போவது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேஷ் ராஜாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

`நாங்க கவரிங் நகையைத்தான் திருடினோம்; தங்க நகையை திருடவில்லை!’- போலீஸிடம் சத்தியம் செய்த கொள்ளையர்கள்; பதறிய வீட்டு ஓனர்

இதனிடையே, புகார் கொடுத்த செல்வகுமாரின் வீட்டிற்குள் புகுந்த வெங்கடேஷ் ராஜாவின் கூட்டாளிகள் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு அவரது மனைவி மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்தும் செல்வகுமார், வெங்கடேஷ் ராஜாவின் கூட்டாளிகள் தங்களை தாக்கியதாக புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, பல்லாவரம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து வெங்கடேஷ் ராஜாவை தீவிரமாக தேடினர். இந்த நிலையில், திரிசூலத்தில் உள்ள கல்குவாரியில் வெங்கடேஷ் ராஜா பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தெரியவந்தது, சுற்றிவளைத்த காவல்துறையினர், வெங்கடேஷ் ராஜா(எ) குண்டன் (22) மற்றும் அவரின் கூட்டாளியான தினேஷ்குமார் (எ) கட்டா தினேஷ் (21), பாலகணேஷ் (23) ஆகியோரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸ் பாணியில் விசாரணை மேற்கொண்டபோது கொள்ளையடித்த நகைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர் . இவர்கள் 3 பேர் மீதும் ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதில் வெங்கடேஷ் என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார் எனவும் மற்றவர்கள் ஊரடங்கினால் அனுப்பப்பட்ட போது வெளியில் வந்தவர்கள் கையில் பணம் இல்லாததால் வீடு புகுந்து திருடியதாக ஒப்புக் கொண்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

`நாங்க கவரிங் நகையைத்தான் திருடினோம்; தங்க நகையை திருடவில்லை!’- போலீஸிடம் சத்தியம் செய்த கொள்ளையர்கள்; பதறிய வீட்டு ஓனர்

பின்னர், காவல்துறையினர் செல்வகுமாரை காவல் நிலையம் அழைத்து உங்கள் வீட்டில் திருடு போனது வெறும் கவரிங் நகை மட்டும்தான் என தெரிவித்துள்ளனர். ஆனால் செல்வகுமார், எங்கள் வீட்டில் 3 சவரன் தங்க நகை உட்பட 2 செல்போன்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் என தெரிவித்தார். 3 சவரன் தங்க நகை இருந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. நாங்கள் பொய்யான புகார் அளிக்கவில்லை எனவும் செல்வகுமார், காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாங்கள் கொள்ளை அடித்தது கவரிங் நகை தான் என்று சத்தியம் செய்து சொன்னார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் செல்வகுமாரோ, “குற்றவாளிகளை நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நகைகளை பறிகொடுத்த எங்களை நம்பவில்லை” என காவல்துறையினரிடம் கூறிவிட்டு மனவேதனையுடன் வீடு திரும்பியுள்ளார்.