`நாங்கள் சிபிஐ அதிகாரிகள்; வீட்டை சோதனை போடணும்!’- 100 பவுனுடன் எஸ்கேப் ஆன கொள்ளையர்கள் ஓராண்டுக்கு பின் சிக்கினர்

 

`நாங்கள் சிபிஐ அதிகாரிகள்; வீட்டை சோதனை போடணும்!’- 100 பவுனுடன் எஸ்கேப் ஆன கொள்ளையர்கள் ஓராண்டுக்கு பின் சிக்கினர்

சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து டாஸ்மாக் ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் திருப்பூரைச் சேர்ந்த பனியன் கடை உரிமையாளர்-மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஓராண்டுக்கு பிறகு கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள பொன்னகரம் அண்ணாநகரை சேர்ந்தவர் காளஸ்வரன் (45). டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அருணாதேவி அங்கன்வாடி ஊழியராக வேலை செய்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி காளஸ்வரன் வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டின் முன்பு கார் வந்துநின்றது. அதில் இருந்து இறங்கிய டிப்-டாப் ஆசாமிகள் காளஸ்வரன் வீட்டுக்குள் நுழைந்து. தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் என்று கூறி வீடு முழுவதும் சோதனையிட்டனர். அப்போது, வீட்டில் இருந்த பீரோ சாவி மனைவியிடம் இருப்பதாக காளஸ்வரன் கூறியுள்ளார்.

இதையடுத்து, அங்கன்வாடிக்கு சென்ற ஆசாமிகள், அருணாதேவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் பீரோவை திறந்து கொடுத்துள்ளார் அருணாதேவி. பின்னர் பீரோவில் இருந்த நகைகள், பணம் மற்றும் நிலத்துக்கான பத்திரங்களை எடுத்து கொண்டு தப்பிவிட்டது கும்பல். இதில் சந்தேகம் அடைந்த காளஸ்வரன், திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ரூ.1 லட்சம் மற்றும் 50 பவுன் நகைகள், நில பத்திரங்களை எடுத்து சென்றதாக கூறியிருந்தார். இதையடுத்து, காவல்துறையின் நடத்திய விசாரணையில் சி.பி.ஐ. அதிகாரிகள் போன்று வந்தவர்கள் மோசடி நபர்கள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் கொள்ளையர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையே திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டாக ரவளிபிரியா ஆகியோர் சமீபத்தில் பொறுப்பேற்றனர். இதையடுத்து நீண்ட நாட்களாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்தனர்.

அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் போன்று நடித்து கொள்ளையடித்த வழக்கை விசாரித்து கொள்ளையர்களை பிடிக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையில் இறங்கினர். அந்த பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன் எண்கள், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான கார் மற்றும் சந்தேக நபர்களின் உருவத்தை கொண்டு விசாரித்தனர். அதில் திருப்பூரை சேர்ந்த ஒரு கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் திருப்பூருக்கு விரைந்தனர். அதில் காளஸ்வரனின் உறவினரும், திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரத்தை சேர்ந்த பனியன் கடை உரிமையாளருமான கோபி (49) தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து நகைகள், பணத்தை கொள்ளையடித்ததை கண்டுபிடித்தனர்.

கொள்ளையடித்த நகைகள், பணத்தை வைத்து கோபி தனது மனைவி, மகன் பெயரில் சொத்துகள் வாங்கியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோபி, அவருடைய மனைவி மாலதி (39), மகன் வினோத் (23) மற்றும் கோபியின் கூட்டாளிகளான சண்முகாநகரை சேர்ந்த அய்யப்பராஜன் (34), முத்துகுமார் (27), அவினாசியை சேர்ந்த குகன்செட்டி (48) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கான ஆவணங்கள், கொள்ளைக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பிறகு கொள்ளையர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர். இந்த கொள்ளையர்களை பிடித்த தனிப்படையினரை டிஐஜி முத்துசாமி பாராட்டினார்.