புதுச்சேரியில் சாலை வரி தள்ளுபடி- ஆளுநர் கிரண்பேடி அதிரடி அறிவிப்பு

 

புதுச்சேரியில் சாலை வரி தள்ளுபடி- ஆளுநர் கிரண்பேடி அதிரடி அறிவிப்பு

புதுச்சேரியில் பொதுமுடக்க காலத்தில் இயங்காத சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரியை ரத்து செய்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து பொது போக்குவரத்து முடங்கிப்போய் உள்ளது. கார்கள், ஆட்டோ தற்போது நிபந்தனையுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் ஆட்டோ, டாக்ஸியில் பயணிக்க அச்சம் கொள்வதாலும், ஊரடங்கு உள்ளதாலும் முன்பு இருந்தது போல வருவாய் இல்லை என்று ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். டாக்ஸி உள்ளிட்டவை இயக்கப்பட்டாலும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை. ஊரடங்கு காலத்தில் முடங்கியிருந்த ஓட்டுநர்களுக்கு அரசு நிவாரண உதவி எதையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் சாலை வரியை ரத்து செய்யுமாறு வாகன உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை எழுப்பி வந்தனர்.

புதுச்சேரியில் சாலை வரி தள்ளுபடி- ஆளுநர் கிரண்பேடி அதிரடி அறிவிப்பு

புதுச்சேரியிலும் கொரோனா பொதுமுடக்க காலத்தில் இயங்காமல் இருந்த 6 மாதத்துக்கு சாலை வரியை ரத்து செய்ய கோரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஓட்டுநர்களின் கோரிக்கையையடுத்து சாலை வரியை ரத்து செய்ய ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், “கொரோனா பொது முடக்க காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரியை தள்ளுபடி செய்வதற்கான கோப்புக்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதன்படி சரக்கு வாகனங்களுக்கு 2 மாதங்களும், பயணிகள் வாகனங்களுக்கு 6 மாதங்களும் சலுகை கிடைக்கும். இதனால் ஏற்படும் ரூ.21 கோடி இழப்பை அரசு கூடுதல் நிதிஆதாரங்கள் மூலம் சரிசெய்யும்” என்று குறிப்பிட்டுள்ளது.