அதிகரிக்கும் இணையவழி குற்றங்கள்… தடுக்கும் வழி என்ன?…

 

அதிகரிக்கும் இணையவழி குற்றங்கள்… தடுக்கும் வழி என்ன?…

திருச்சி

இணையவழி குற்றங்களை தடுக்கும் விதமாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென, திருச்சி மாநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக திருச்சி மாநகர காவல்துறை வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்கள் தங்களது செல்போனிற்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப் வீடியோ அழைப்பை எந்த காரணம் கொண்டும் ஏற்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. வீடியோ அழைப்பின் மூலம் ஸ்கிரீன் ஷாட் எடுத்து, அதனை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து பணம் பறிக்கும் கும்பல்கள் இயங்கி வருவதாகவும், எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

அதிகரிக்கும் இணையவழி குற்றங்கள்… தடுக்கும் வழி என்ன?…

இதேபோல், வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு உள்ளதாக கூறி செல்போன் நம்பருக்கு வரும் லிங்க்-களை திறக்க கூடாது என்றும், குறிப்பிட்ட லிங்கை தொடுவதன் மூலம் பயனாளரின் செல்போன் எண் ஊடுருவப்பட்டு, அவரது வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் பணம் ஆகியவை இணையவழியில் திருடப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் மூத்த குடிமக்கள் எச்சரிகையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும், செல்போன் கோபுரம் அமைக்க மத்திய அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக முன் பணம் செலுத்த கூறி மின்னஞ்சலோ, குறுஞ்செய்தியோ வந்தால், அதனை நம்பி ஏமாற வேண்டாம் என கூறியுள்ள போலீசார், ட்ராய் அமைப்பு எந்த தனிப்பட்ட நபர்களுக்கும் தடையில்லா சான்று வழங்குவதில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளனர்..

அதிகரிக்கும் இணையவழி குற்றங்கள்… தடுக்கும் வழி என்ன?…

இதேபோல், தனி நபர்கள் மற்றும் சிறு வணிகர்கள் விரைவாகவும், தொந்தரவின்றியும் கடன் பெறுவதற்காக அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் தளங்கள் மற்றும் மொபைல் செயலிகளுக்கு இரையாக வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள காவல்துறையினர், அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பயன்பாடுகளுடன் கே.ஒய்.சி ஆவணங்களின் நகல்களை பகிரக் கூடாது என்றும் எச்சரித்து உள்ளனர். இது தொடர்பான புகார்களை சம்பந்தப்படட காவல் நிலையங்களிலோ அல்லது https://sachet.rbi.org.in என்ற இணைய தளத்திலோ பதிவுசெய்ய அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும், ஆன்லைன் சந்தையில் மறுவிற்பனை செய்யப்படும் வாகனங்கள் மற்றும் எலக்டரானிஸ் பொருட்களை வாங்க முன்பணம் செலுத்த கூறுபவர்களிடமும், மருத்துவ உதவி அல்லது அவசர தேவைக்கு பணம் உதவி கோரும் அறிமுகம் இல்லாத நபர்களிடமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.