ஆரோக்கியமான நீண்ட கூந்தலுக்கு அரிசி வடிநீர்!

 

ஆரோக்கியமான நீண்ட கூந்தலுக்கு அரிசி வடிநீர்!

அரிசி நம்முடைய ரத்தத்தில், மரபணுவில் ஊறிய விஷயம். மூன்று வேலையும் அரிசி உணவு நமக்கு வேண்டும். சப்பாத்தி, மேற்கத்திய உணவுகள் ஆயிரம் வந்தாலும் இட்லி, தோசை, சாதம் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது.

தலைமுறை தலைமுறையாக அரிசியை உணவாக, மருந்தாகப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். என்றைக்காவது அது அழகுக்கும் பயன்படும் என்று தெரிந்து வைத்துள்ளோமா?

ஆரோக்கியமான நீண்ட கூந்தலுக்கு அரிசி வடிநீர்!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட அரிசியை பிரதான உணவாக பயன்படுத்தும் நாட்டில் எல்லாம் முடி பராமரிப்புக்கும் அரிசியை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா. அதுவும் அரிசியை கழுவிவிட்டு கீழே ஊற்றும் தண்ணீரைக் கொண்டு முடியின் நலத்தைப் பராமரித்து வந்துள்ளார்கள்.

அரிசியை ஊறவைத்த தண்ணீர் மற்றும் வெந்த பிறகு வடித்த தண்ணீரில் ஸ்டார்ச் சத்து உள்ளது. இதைக் கொண்டு தலைமுடியைக் கழுவி வந்தால் முடி நன்கு ஆரோக்கியமாக வேகமாக வளரும்.

அரிசி நீரில் என்ன உள்ளது?

அரிசி நீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின் பி, வைட்டமின் இ, தாதுஉப்புக்கள், ஆன்டி ஆக்ஸ்டிண்ட்கள் நிறைவாக உள்ளன. அவை முடிக்கு மட்டுமல்ல சருமத்துக்கும் நலம் தரும்.

அரிசி நீரைத் தொடர்ந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், பிளவுபட்ட முடிகள் நீங்குகிறது, முடி மென்மையாகிறது, முடி பொலிவு பிரகாசம் அடைகிறது. அனைத்துக்கும் மேலாக முடி நீளமாக வளர்வதுடன் உறுதியாகவும் மாறுகிறது.

தயாரிப்பது எப்படி?

அரிசி நீர் தயாரிப்பது மிகவும் எளிதானது. அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு ஊறவிட வேண்டும். பிறகு அரிசியை களைந்தெடுத்துவிட்டால் கிடைக்கும் தண்ணீர்தான் அரிசி நீர்.

அரிசியை வேகவைத்து சாதம் வடித்ததும் கிடைக்கும் வடி நீர் கூட ஆரோக்கியமானதுதான்.

இந்த ஃபிரஷ் அரிசி நீரைக் காட்டிலும் சற்று புளித்த அரிசி நீரால் பலன் மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆறு மணி முதல் 12 மணி நேரம் வரை தண்ணீரை ஊற வைத்து அதன் பிறகு பயன்படுத்தலாம். இப்படிச் செய்யும் போது பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களின் அளவு அதிகரிக்கிறது.

பயன்படுத்துவது எப்படி?

அரிசி தண்ணீர் ஒரு கண்டீஷனர் போல செயல்படும்.

ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு முதலில் தலைக்குக் குளிக்க வேண்டும்.

நன்கு சுத்தம் செய்த பிறகு, தலையில் அரிசி நீரை விட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

15 முதல் 20 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவ வேண்டும்.

இப்படிச் செய்யும்போது சருமத்துக்கும் கூட அரிசி நீர் பலன் தருகிறது. சருமம் பொலிவு பெறும். தோல் அழற்சி பிரச்னை சரியாகும்.