• February
    25
    Tuesday

Main Area

Mainபுரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் தொப்பியும்,.. கண்ணாடியும் சுவாரஸ்யமான பின்னணி தகவல்..!?

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்  என்றதும் மக்களுக்கு நினைவு வருவது,போசு பொசுவென்ற வெள்ளைக்கலர் தொப்பி,முகத்தை மறைக்கும் கருப்பு கலர் கூலிங் கிளாஸ்,எப்போதும் அவரது வலது கையில் டாலடிக்கும் ரேடோ வாட்ச் மூன்றும்தான் : அதற்குப் பிறகுதான் இரட்டை இலையே!

mgr

எம்.ஜி.ஆர்  ஆரம்பகாலத்தில் இருந்தே கருப்புக் கண்ணாடி மீதும் விதவிதமான தொப்பிகள் மீதும் மாறாத காதல் கொண்டிருந்தார்.அமெரிக்க கௌபாய் தொப்பி,ஹெல்மெட்,பிரிட்டிஷ் ஹாட்,மேஜிக் நிபுணர்கள் அணியும் தொப்பி,மீனவர்கள் அனியும் தென்னம்பாளைத் தொப்பி,இஸ்லாமியர் அணியும் துருக்கித் தொப்பிகள் (பக்கவாட்டில் ஒரு குஞ்சலம் தொங்கும் தொப்பி) என்று உலகில் இருக்கும் அத்தனை விதமான தொப்பிகளையும் அணிந்து நடித்த ஒரே  இந்திய நடிகர் எம்.ஜி.ஆர் மட்டும்தான்!

mgr

சரித்திரப்படமாகவே இருந்தாலும் அதிலும் தொப்பியை புகுத்தி புதுமை செய்தவர் எம்.ஜி.ஆர் . அரசகட்டளை படத்தில் வரும் ' ஆடிவா….ஆடிவா ' என்கிற பாடலில் வால் முடியுடன் சேர்த்துப் பாடம் செய்த நரித்தோல் தொப்பி அணிந்து தோன்றுவார்.

இப்படி சினிமாவில் விதவிதமான தொப்பிகள் அணிந்த எம்.ஜி.ஆர்  அடிமைப்பெண் படத்துக்குப் பிறகு நிஜ.வாழ்க்கையிலும் தொப்பி அணியத்தொடங்கினார்.அந்தப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் பாலைவனப்  பகுதியில்  நடந்தபோது கடும் வெய்யிலால் அவர் சிரம்ப்படுவதைப் பார்த்த நண்பர் ஒருவர் வாங்கி வந்து கொடுத்த வெள்ளை நிற 'புஷ் குல்லாவும் , வெய்யிலுக்காக அணிந்த 'கருப்புக் கண்ணாடியும் தான் பிற்காலத்தில் அவரது அடையாளம் ஆயின.

mgr and karunanidhi

சென்னைக்கு வந்ததும் ரஸாக் என்பவர் தயாரித்துத் தந்த தொப்பிகளைத்தான் அவர் தொடர்ந்து அணிந்தார். காஷ்மீர் பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகளின் ரோமமும் மூன்று அடுக்குக் கொண்ட கேன்வாஸ் துணியும் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த தொப்பிகளில் வியர்வையை தடுக்க சிறிய துளைகள் இருந்தன.

ஒவ்வொரு முறையும் ஆறு தொப்பிகள் ஆர்டர் செய்து,அதில் இருந்து இரண்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராம்.ஆனால்,ரஸாக்குக்கு ஆறு தொப்பிகளுக்கான பணத்தைக் கொடுத்து விடுவாராம்.அதேபோல அவறது இன்னொரு அடையாளம் அவர் பட்டன் போடப்பட்ட முழுக்கை சட்டையின் மேல் கட்டிக்கொள்ளும் ரேடோ வாட்ச்!

எம்.ஜி.ஆர் சமாதிக்கு மேல் காதை வைத்துக் கேட்டால்,அவரது வாட்ச் ஓடும் சப்தம் கேட்கிறது,என்பதை இப்போதும் நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்.
1953-ல் கல்லக்குடிக்கு , டால்மியாபுரம் என்கிற பெயரை ஒரு சிமெண்ட் கம்பெனியின் உரிமையாளர் நினைவாகச் சூட்டியது அன்றைய காங்கிரஸ் அரசு.அதை எதிர்த்து தி.மு.க நடத்திய போராட்டத்திற்கு கருணாநிதி தலைமை தாங்கினார்.

mgr

ரயில் பாதையில் படுத்து போராட்டம் நடத்தி பெயர் மாற்றத்தை தடுத்ததால் கருணாநிதி அன்றைக்கு பெரிய கதாநாயகனாகக் கொண்டாடப்பட்டார்.
அதைத் தொடர்ந்து சென்னைக்கு ரயிலில் புறப்பட்ட கருணாநிதியை வரவேற்க,சென்னை எலும்பூர் ரயில் நிலையத்திற்கு பல்லாயிரம் தி.மு.க தொண்டர்கள் கூடி விட்டனர்.அவரால் ரயில் பெட்டியில் இருந்து வெளியே காலை வைக்கவே முடியவில்லை.கருணாநிதியை வரவேற்க வந்திருந்த எம்.ஜி.ஆர்  கொஞ்சமும் யோசிக்காமல்,அவரை இரண்டு கைகளாலும் அள்ளித் தூக்கிக்கொண்டு வெளியே வந்து காரில் ஏற்றி விட்டார்.அந்த நெரிசலில் எம்.ஜி.ஆர்  கையில் கட்டி இருந்த கடிகாரம் காணமல் போய் விட்டது.இதைப் பார்த்த கருணாநிதி பதட்டத்தோடு எம்.ஜி.ஆரைப் பார்த்து,'அடடா..,வெளிநாட்டு வாட்சு தொலஞ்சுடுச்சே' என்று கவலையோடு சொல்லியிருக்கிறார்.அதைக் கேட்ட எம்.ஜி.ஆர் எந்தப் பதட்டமும் இல்லாமல்… ‘வெளிநாட்டு வாட்ச்சை விட நம்மநாட்டு தலைவர்தான் எனக்கு முக்கியம்! ‘ என்று சொல்லியிருக்கிறார்.

காந்திக்குப் பிறகு,சின்னக் குழந்தைகள் கூட எளிதாக வரையக் கூடிய தலைவர் படம்எம்.ஜி.ஆர்  படம்தான்.ஒரு தொப்பியும் கண்ணாடியும் வரைந்தாலே அவர் முகம் வந்துவிடும்.அந்த அளவுக்கு அவரோடு இணைந்து சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டது அந்தத் தொப்பி.

2018 TopTamilNews. All rights reserved.