ஊரடங்கு விதிமீறல் – பல்லடத்தில் 6 தொழிற்சாலைகளுக்கு சீல் வைப்பு!

 

ஊரடங்கு விதிமீறல் – பல்லடத்தில் 6 தொழிற்சாலைகளுக்கு சீல் வைப்பு!

திருப்பூர்

பல்லடம் பகுதியில் பொதுமுடக்கத்தின் போது விதிகளை மீறி செயல்பட்ட 6 தொழிற்சாலைகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் காடா துணி உற்பத்தி சார்ந்த விசைத்தறி கூடங்கள், சைசிங், ஸ்பின்னிங் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், தற்போது ஆலைகள் செயல்பட அரசு தடை விதித்து உள்ளது.

இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை இரவு ஊரடங்கை மீறி சில தொழிற்சாலைகள் செயல்படுவதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நள்ளிரவில் குறிப்பிட்ட தொழிற்சாலைகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

ஊரடங்கு விதிமீறல் – பல்லடத்தில் 6 தொழிற்சாலைகளுக்கு சீல் வைப்பு!

அப்போது, 5 விசைத்தறி கூடங்கள் மற்றும் ஒரு துணிநூல் மில்லில் பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஊரடங்கை மீறி செயல்பட்ட 6 ஆலைகளுக்கும் வட்டாட்சியர் தேவராஜ் தலைமையில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

மேலும், ஆலை உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபாரதம் விதித்த அதிகாரிகள், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் 6 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.