உத்தர பிரதேச உப லோக்ஆயுக்தா உறுப்பினராக எஸ்.கே. யாதவ் பதவியேற்பு.. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி

உத்தர பிரதேச உப லோக்ஆயுக்தா உறுப்பினராக எஸ்.கே. யாதவ் பதவியேற்பு.. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் உத்தர பிரதேச உப லோக்ஆயுக்தா உறுப்பினராக நேற்று பதவியேற்றார்.

நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மற்றும் எல்.கே. அத்வானி, உமாபாரதி மற்றும் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் சம்பந்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்வு வழங்கியவர் சிறப்பு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ். 2019ம் ஆண்டிலேயே அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு காரணமாக அவருக்கு பணி நீடிப்பு வழங்கப்பட்டது. 2020 செப்டம்பர் 30ம் தேதியன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

உத்தர பிரதேச உப லோக்ஆயுக்தா உறுப்பினராக எஸ்.கே. யாதவ் பதவியேற்பு.. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி
பாபர் மசூதி இடிப்பு (கோப்புப்படம்)

அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்பட 32 பேரும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கு முடிவுக்கு வந்ததால் நீதிபதி பணியிலிருந்து சுரேந்திர குமார் யாதவ் ஓய்வு பெற்றார். இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவை மூன்றாவது உத்தர பிரதேச உப லோக்ஆயுக்தா உறுப்பினராக கடந்த 6ம் தேதியன்று உத்தர பிரதேச கவர்னர் நியமனம் செய்தார். நேற்று லோக்ஆயுக்தா தலைவர் சஞ்சய் மிஸ்ராவால் மற்ற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் உப லோக்ஆயுக்தா உறுப்பினராக சுரேந்திர குமார் யாதவ் சத்திய பிரமாணம் எடுத்து கொண்டார்.

உத்தர பிரதேச உப லோக்ஆயுக்தா உறுப்பினராக எஸ்.கே. யாதவ் பதவியேற்பு.. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி
சுரேந்திர குமார் யாதவ்

லோக்ஆயுக்தா ஒரு அரசியல் சாராத அமைப்பாகும். ஊழல், அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் அல்லது அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்களால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் ஒரு சட்டரீதியான ஆணையமாக செயல்படுகிறது.