புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் நியூயார்க்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

 

புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் நியூயார்க்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

இங்கிலாந்து, தென் ஆப்ரிக்காவில் மாறுபாடு அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வகையை நியூயார்க் நகர நோயாளிகளிடமிருந்து ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. சில மாதங்களுக்கு அதிக வேகமாகப் பரவும் புதிய வகை இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்த இங்கிலாந்து அரசு, வேறு வழியின்றி மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கும் அளவுக்கு கொரோனா வேகமாக பரவியது. இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தைப் பல நாடுகளும் துண்டித்தன.

புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் நியூயார்க்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

அதே போல் தென் ஆப்ரிக்காவிலும் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பானிலும் கூட 91 பேருக்கு மாறுபாடு அடைந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மற்றோரு மாறுபாடு அடைந்த கொரோனா கிருமியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்ததாக செய்தி வெளியாகி உள்ளது. இதற்கு பி1.526 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழக வாகெலோஸ் காலேஜ் ஆஃப் பிசீஷியன்ஸ் அண்டு சர்ஜன்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

இது தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிகம் வேகமாக பரவக் கூடியதாக உள்ளது என்றும் இதன் காரணமாக நோயாளிகள் எண்ணிக்கை 12 சதவிகிதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வைரஸ் மிகவும் ஆற்றல் மிக்கது, நம்முடைய சிகிச்சைகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கிருமியில் இ484கே என்ற புரதம் மியூட்டன்ட் ஆகியுள்ளது. இது மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கச் செய்யும் என்று தெரிவித்துள்ளனர்.

நம்மிடம் உள்ள அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் தொடக்கத்தில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் கிருமிகளைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டவை. ஆனால், புதிது புதிதாக மாறுதல் அடைந்த வீரியம் மிக்க வைரஸ் கிருமிகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதனால், தடுப்பூசிகள் எந்த அளவுக்கு பயனைத் தரும் என்று தெரியவில்லை என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.