மாதவிலக்கு காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஸ்மூத்தி!

 

மாதவிலக்கு காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஸ்மூத்தி!

பொதுவாக பழங்களை கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. சில சமயங்களில் சர்க்கரை சேர்க்காமல் பழங்களை அரைத்து ஸ்மூத்தி போன்று எடுத்துக்கொள்ளலாம்.

ஐந்து பழங்களை ஒன்று சேர்த்து ஸ்மூத்தி செய்து அருந்தும்போது பல பழங்களின் ஊட்டச்சத்துக்கள், மருத்துவ குணங்கள் நமக்கு கிடைத்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு ஸ்மூத்தி செய்வது எப்படி என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

மாதவிலக்கு காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஸ்மூத்தி!

ஐந்து பழங்கள் ஸ்மூத்தி

தேவையானவை:

தோல் நீக்கிய அன்னாசிப்பழம் – இரண்டு வட்ட ஸ்லைஸ்

முலாம்பழம் – பாதி

பப்பாளி – 50 கிராம்

வாழைப்பழம் – நடுத்தரம் 1

திராட்சை – 25 கிராம்

செய்முறை:

அன்னாசிப் பழம் மற்றும் திராட்சையை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் முலாம்பழம், பப்பாளி, வாழை, தேவை எனில் சிறிது ஐஸ் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். இதை வடிகட்டாமல் அப்படியே அருந்த வேண்டும்.

குறிப்பு: சீசன் நேரத்தில் ஆரஞ்சு, மாம்பழம் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை. பழங்களில் உள்ள இனிப்பு சுவையே போதுமானது.

இந்த குறிப்பிட்ட பழங்கள்தான் சேர்க்க வேண்டும் என்று இல்லை. உங்களுக்கு சுவை பிடிக்கவில்லை என்றால், பிடிக்காத பழத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதில் வேறு பழத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்.

மருத்துவ பலன்கள்:

பப்பாளியில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அன்னாசியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது தவிர ஆன்டிஆக்ஸிடண்ட்கள், இதர வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன.

இந்த ஸ்மூத்தியை அடிக்கடி அருந்திவந்தால் செரிமான பிரச்னைகள் நீங்கும், இரிடபிள் பவுல் சிண்ட்ரோம் என்று சொல்லப்படும் சாப்பிட்ட உடனே மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் நோய், இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் நெருங்காது.

சர்க்கரை நோயாளிகள் கூட எப்போதாவது இதை எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி அனைவருக்கும் ஏற்ற ஸ்மூத்தி இது.

மதவலிக்குக் காலத்தில் பெண்கள் ஆற்றல் குறைந்து காணப்படுவார்கள். அவர்கள் இந்த ஆரோக்கியமான ஸ்மூத்தியை எடுத்துக்கொள்ளலாம்.