செல்லமா வளர்க்கும் நாய், பூனை கடிச்சா கூட ரேபிஸ் வரலாம்! – எச்சரிக்கை பதிவு

 

செல்லமா வளர்க்கும் நாய், பூனை கடிச்சா கூட ரேபிஸ் வரலாம்! – எச்சரிக்கை பதிவு

வெறிநாய்க் கடி என்று நம் ஊரில் அழைக்கப்படும் ரேபிஸ் தொற்று ஏற்பட்டால் அந்த நபர் உயிரிழக்கும் நிலையை யாராலும் தடுக்க முடியாது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். நாய், பூனை, வவ்வால், ஆடு, குதிரை மூலமாகக் கூட ரேபிஸ் கொடிய வைரஸ் கிருமி பரவலாம் என்றாலும் உலகம் முழுக்க ரேபிஸ் நோய் நாய்க் கடி மூலமாகவே பரவுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

விலங்குகளின் உமிழ் நீரில் வாழும் ரேபிஸ் வைரஸ் மூலமாக வெறிநாய்க் கடி நோய் பரவுகிறது. அறிகுறிகளைக் காட்டத் தொடங்குவதற்கு முன்பே அதை சரி செய்துவிட வேண்டும். அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டாலே மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துவிடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

செல்லமா வளர்க்கும் நாய், பூனை கடிச்சா கூட ரேபிஸ் வரலாம்! – எச்சரிக்கை பதிவு

வளர்ச்சி அடையும் காலம்:

மனித உடலுக்குள் நுழைந்த ரேபிஸ் வைரஸ் முதிர்ச்சி அடைந்து மனித உடல் மீது தாக்குதல் நடத்த நான்கு முதல் 12 வாரங்கள் வரை காலத்தை எடுத்துக்கொள்ளும். நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவானவர்களுக்கு ஐந்து, ஆறு நாளில் கூட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிகுறிகள்:

ரேபிஸின் முதல் அறிகுறி காய்ச்சல்தான். காய்ச்சலுடன் தலைவலி, குமட்டல், வாந்தி, கவலை, குழப்பமான மனநிலை, விழுங்குவதில் சிரமம், அதிகப்படியான உமிழ்நீர் சுரத்தல், தண்ணீரைக் கூட விழுங்க முடியாத நிலை, மனதில் மாயத் தோற்றம் தோன்றுவது, தூக்கமின்மை, கை, கால் என உடலின் சில பகுதிகள் செயல் இழத்தல், எதிர்ப்பு உணர்வு போன்றவை ஏற்படலாம்.

அறிகுறி தென்படும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை. விலங்குகள் குறிப்பாக நாய், பூனை, வவ்வால் கடித்தாலே உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும். வீட்டில் வளர்க்கும் நாய்தானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. நோயாளிக்கு என்ன மாதிரியான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதை மருத்துவர்தான் முடிவு செய்வார்.

நாய் கடிக்க வந்தது, ஆனால் பல் படவில்லை என்று அலட்சியமாக இருந்து விடக் கூடாது. பல் பட்டுள்ளதா இல்லையா என்பதை மருத்துவரிடம் காட்டி உறுதி செய்துகொள்வது நல்லது.

வெறிநாய்க் கடி நோய் ரேபிஸ் என்ற வைரஸ் மூலமாகப் பரவுகிறது. இந்த வைரஸ் நோயைக் குணமாக்க மருந்து இல்லை. ஆனால், இந்த நோய் வராமல் தடுக்க தடுப்பூசி உள்ளது.

ரேபிஸ் நோய் நாய் அல்லது வேறு ஒரு விலங்குக்கு இருந்தால், அது கடித்தால்தான் மனிதர்களுக்கு பரவும் என்று இல்லை. அதன் எச்சில் மனிதர்களின் புண், வாய், கண் வழியாக உடலுக்குள் சென்றால் கூட தொற்று ஏற்படலாம். எனவே, விலங்குகள் புண்களை நக்க அனுமதிக்க வேண்டாம். விலங்குகளைத் தொட்ட பிறகு கட்டாயம் சோப் போட்டு கைகளைக் கழுவ வேண்டும்.

வெறிநாய்க் கடி நோய் வராமல் தடுக்க…

வெறிநாய்க் கடி வைரஸ் தொற்று பரவாமல் இருக்க செல்லப் பிராணிகளுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும்.

செல்லப் பிராணி தெருவில் அலையும் மற்ற விலங்குகள், காட்டு விலங்குகளுடன் சுற்றித் திரிவதைத் தடுக்க வேண்டும்.

சந்தேகத்துக்குரிய வகையில் விலங்குகள் சுற்றித் திரிந்தால் உள்ளாட்சி நிர்வாகத்திடம் சொல்லி அதை அப்புறப்படுத்த வேண்டும்.

மனிதர்களுக்கு வெறிநாய்க் கடி பாதிப்பு வராமல் இருக்க தடுப்பூசி உள்ளது. செல்லப் பிராணி வளர்ப்பவர்கள் கட்டாயம் அதை போட்டுக்கொள்ள வேண்டும்.

சிகிச்சை என்ன?

ரேபிஸ் நோய்த் தொற்று உடலில் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டால் அதன் பிறகு எந்த ஒரு சிகிச்சையும் பலன் அளிக்காது. பெரும்பாலும் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகவே உள்ளது. மிகவும் அரிதாக ஒரு சிலர் உயிர் பிழைத்த அதிசயமும் உள்ளது. எனவே, விலங்கு கடித்து, ரேபிஸ் நோய் வெளிப்படும் வரை காத்திருக்கத் தேவையில்லை. உடனடியாக சிகிச்சை பெறுவது மட்டுமே உயிரைக் காப்பாற்ற உதவும்.