தொழிலதிபரை கடத்தி சித்ரவதை செய்த காவல்துறை உயரதிகாரி! நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு?

 

தொழிலதிபரை கடத்தி சித்ரவதை செய்த காவல்துறை உயரதிகாரி! நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு?

வேலியே பயிரை மேய்ந்தது என்ற பழமொழிக்கு ஏற்ப, சென்னையில் காவல்துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவரே தொழிலதிபரை கடத்தி சென்று மிரட்டி பணம் பறித்ததாக சென்னை உயரதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அம்பத்தூரை சேர்ந்தவர் ராஜேஷ், இவர் அம்பத்தூரில் பிபிஓ அலுவலகம் ஒன்றை நடத்திவந்தார். இவருக்கும் சாய் சாஃப்ட் இன்ஃபோடெக் நடத்திவந்த வெங்கடேசனுக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்ததாக தெரிகிறது. ராஜேஷ்க்கு வெங்கடேசன் பணம் கொடுத்ததாகவும், ராஜேஷ் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அதனை திருப்பிக்கொடுக்காமல் கோவை ஓடிப்போனதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில், ராஜேஷை கடத்திய காவல்துறையினர், ரெட்டில்ஸில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அவரது குடும்பத்தினரையும் சித்தரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ராஜேஷின் வருங்கால மனைவிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளனர். இதனையடுத்து பணத்துக்கு பதிலாக ராஜேஷ் தனது சொத்துக்களை வெங்கடேசனுக்கு எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.

தொழிலதிபரை கடத்தி சித்ரவதை செய்த காவல்துறை உயரதிகாரி! நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு?

இதனிடையே கடந்த நவம்பர் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஐஜி ரேங்கில் இருக்கக்கூடிய உயரதிகாரி ஒருவர், காவல் உதவி ஆணையர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் மீது ராஜேஷ் புகார் அளித்தார். இதில் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு இருப்பதால் டிஜிபி அலுவலகத்திற்கு இந்த புகாரை சென்னை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். தமிழக டிஜிபி இந்த புகார் குறித்த முகாந்திரம் இருக்கிறதா என விசாரணை செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். டிஜிபியின் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது ஆள்கடத்தல், கொலை மிரட்டல், சொத்துகளை அபகரித்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்துவரும் நிலையில், அந்த அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டில் தகுந்த நடவடிக்கை எடுத்த திமுக தலைமையிலான அரசு, ஐஜி ரேங்கில் இருக்கக்கூடிய காவல்துறை உயரதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.