பேமிலி மேன் தொடருக்கும் பெப்சிக்கும் சம்பந்தமில்லை- ஆர்.கே. செல்வமணி

 

பேமிலி மேன் தொடருக்கும் பெப்சிக்கும் சம்பந்தமில்லை- ஆர்.கே. செல்வமணி

லைகா புரோடக்சன்ஸ் திரு.சுபாஸ்கரன் அவர்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India/FEFSI) தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களிடம், லைகா முதன்மை செயல் அலுவலர் திரு.ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,லைகா இயக்குனர் திரு.ராஜாசுந்தரம் நிருதன், மற்றும் திரு.கெளரவ் சச்ரா, நிர்வாக தயாரிப்பாளர் திரு.சுப்பு நாராயண் ஆகியோர் உடனிருந்தனர்.

பேமிலி மேன் தொடருக்கும் பெப்சிக்கும் சம்பந்தமில்லை- ஆர்.கே. செல்வமணி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.செல்வமணி, “1 கோடி நிவாரணத் தொகை வழங்கிய லைகா நிறுவனர் சுபாஷ்கரனுக்கு பெப்சியின் 25,000 குடும்பம் சார்பில் மனமார்ந்த நன்றி . கடந்த ஆண்டு திரைத்துறையில் அனைவரும் பெப்சிக்கு உதவினர்.4 கோடிக்கு மேல் பணமாகவும் , பொருள்களாகவும் கிடைத்தது. இரண்டாம் அலையில் அஜித் , ஐஸ்வர்யா ராஜேஷ் , சத்யராஜ் போன்ற சிலர் மூலம் 20 லட்சம் மட்டுமே கிடைத்தது. மணிரத்னம் 10,000 குடும்பங்களுக்கு உதவியுள்ளார். லைகாவிடம் நிதி கேட்பதற்கு தயக்கமாக இருந்தது . ஆனால் அவர்களே தொடர்பு கொண்டு உதவுவதாக கூறினார். இதுவரை நிவாரணம் வழங்கப்படாத உறுப்பினர்களுக்கு 1,500 ரூபாய் வரை வழங்க உள்ளோம்.

இப்போது படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி அளித்திருப்பது திரைத்துறை , சின்னத்திரை மீண்டு வர உதவும் . இந்த உத்தரவை வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நன்றி.

குடும்ப அட்டைதாரர்களுக்கு 4ஆயிரம் வழங்கியது போல பெப்சி தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். திரையரங்கு திறக்கப்பட்டால் மட்டுமே 100 சதவீதம் மீளுவோம்.

இரண்டாம் அலையில் 25 லட்சம் வரை பெப்சிக்கு நிவாரணமாக கிடைத்துள்ளது.

வரும் வாரத்தில் 60 சதவீத திரைத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. திரைத்துறையில் இதுவரை 2ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியோருக்கு திரைத்துறை பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ்நாட்டில் 18 தொடர்கள் இன்று எடுக்கப்படுகின்றன.

இந்தியன் -2 விவகாரத்தில் லைகா மீதும் இயக்குநர் சங்கர் மீதும் எந்த தவறும் இல்லை. இரண்டு தரப்பின் இடையேயான பிரச்சனைகள் சுமூகமாக முடிக்கப்படும்.

சிறுபட தயாரிப்பாளர்களுக்கு தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தொடர்ந்து உதவி வருகிறோம். அரசும் , தயாரிப்பாளர் சங்கமும் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். பெரிய பட்ஜெட் படங்கள் அலங்காரம் மட்டும்தான் , சிறு படங்கள்தான் திரைத்துறையை காப்பாற்றி வருகிறது.

திரையரங்க திறப்பு குறித்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் , தமிழக அரசு உரிய முடிவு செய்யும். ஊரடங்கை மக்களே வரவேற்கத் தொடங்கி விட்டனர். திரையரங்கு திறக்க இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கிறோம். பண்டிகைகள் வருவதால் திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க காலமும் , அரசும் உதவ வேண்டும்.

நாளிதழில் செய்தி படித்தது போய் இப்போது செய்தி சேனல்களை பார்த்து செய்திகளை தெரிந்து கொள்கிறோம் . அதுபோன்ற வளர்ச்சிதான் ஓடிடி தளங்கள். தடுப்பூசி போட்டால்தான் திரையரங்கு வர முடியும் என கூறினால் யாரும் சினிமா பார்க்க வரமாட்டார்கள்.

பையனூர் படப்பிடிப்பு தளம் 90 சதவீதம் நிறைவுற்று விட்டது.இன்று முதல் கட்டுமான பணி மீண்டும் தொடங்குகிறது. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அரசுடன் பெப்சி ஒத்துழைக்கும். பையனூருக்கு இடம் வழங்கியது கருணாநிதி, நிதி கொடுத்தது எடப்பாடி பழனிசாமி, பையனூர் அம்மா படப்பிடிப்பு தளத்தை திறந்து வைக்குமாறு முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்படும். பேமிலி மேன் தொடருக்கும் பெப்சிக்கும் சம்பந்தமில்லை” எனக் கூறினார்.