கொரோனா லீவில் இந்த 10 நாவல்களை வாசிக்கலாமே! #BookRefer

கொரோனா நோய்த் தொற்று உலகையே முடங்க வைத்துவிட்டது. இயல்பாக எல்லோராலும் வெளியில் செல்ல முடியவில்லை. வழக்கமான பணிகளைக்கூட பார்க்க முடியவில்லை. அதனால் வீட்டுக்குள்ளேயே இருக்கும் சூழல். டிவி, மொபைல் என நேரத்தைக் கழித்தாலும் ஏதாவது பயனுள்ளதாக மாற்ற முடியவில்லை என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அதற்கு நிச்சயம் உதவுவது புத்தக வாசிப்புதான்.

நமக்கு தெரியாத ஒரு வாழ்க்கையை மிக நெருக்கமாக பகிர்ந்துகொள்பவையே இலக்கியம். அதிலும் நாவல்கள் பெரும் தாக்கத்தை நமக்குள் செலுத்திவிடும். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் தமிழக வாசகர்களிடையே ஏற்படுத்திய அதிர்வலைகள் நமக்கு எல்லோருக்குமே தெரியும். அதனால் நீண்ட விடுப்பு அல்லது நிறைய ஓய்வு கிடைக்கும் இந்த குவாரன்டைன் காலத்தில் வாசிக்க உகந்தது நாவல்களே…

நாவல் என்றதுமே பொன்னியின் செல்வன் என்று பழைய நாவல்களைப் பட்டியலிடுவதைத் தவிர்ப்போம். ஏனெனில், அவற்றைப் பலரும் வாசித்திருக்கக்கூடும். கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்துள்ள நவீன நாவல்களில் பத்து மட்டும் உங்களின் அறிமுகமாகக் கொடுக்கிறோம். இதில் உள்ள எண்கள் தரத்தின் அடிப்படையில் வரிசை எண்கள் மட்டுமே. மேலும், இன்னும் பல நல்ல நாவல்கள் இருக்கின்றன. பத்து என்பதால் இத்தோடு நிறுத்த வேண்டியதாயிற்று. அடுத்தடுத்த பகுதிகளில் மீதமுள்ள புத்தகங்களையும் அறிமுகப்படுத்தலாம்.

1. வேள்பாரி: சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘காவல் கோட்டம்’ எனும் நாவலை எழுதிய சு.வெங்கடேசனின் இரண்டாவது நாவல் வேள்பாரி. பழங்காலத்து கதை என்றாலே நம்பமுடியாத சாகசங்களால் நிறைந்திருக்கும். ஆனால் வேள்பாரி நாவல் பாரி என்னும் குறுநில மன்னனின் வீரத்தை நம்மோடு அமர்ந்து உரையாடும் விதமாக எழுதப்பட்டிருக்கிறது. கடையேழு வள்ளல்களில் ஒருவன் என்றும், முல்லை கொடி படர்வதற்கு இடமின்றி தவித்தபோது தன் தேரையே அளித்தவன் என்று மட்டுமே பாரியைப் பற்றித் தெரிந்திருப்போம். ஆனால், அவன் நல்லாட்சி செய்ததையும் அவன் நாட்டின் மீது படையெடுத்து வந்ததையும் மிக எளிமையாகவும் அதேநேரம் ஏராளமான தகவல்களையும் இணைத்து எழுதியிருக்கிறார் சு.வெங்கடேசன்.

 novels

2. சஞ்சாரம்: 2018 ஆம்ம் ஆண்டு சாகித்ய அகாடமியின் விருது பெற்ற நாவல் சஞ்சாரம். தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். நாவல், சிறுகதை, சினிமா, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் எனப் பல்முகத் திறன் வாய்ந்த படைப்பாளி. அவரின் எழுத்தில் உருவானதே சஞ்சாரம் எனும் நாவல். நாதஸ்வரம் வாசிக்கும் இசைக்கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றிய நுட்பமான ஆவணமே இந்நாவல். இதற்கான எஸ்.ராமகிருஷ்ணன் ஓராண்டுக்கும் மேலாக அலைந்து திரிந்து தகவல்களையும் இசைக்கலைஞர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் சேகரித்துள்ளார். இந்நாவலைப் படித்ததும் நாதஸ்வர கலைஞர்கள் மீது மிகப்பெரிய மதிப்பும் அன்பும் உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை. சென்ற ஆண்டு புத்தகக் கண்காட்சியில் மிக அதிக எண்ணிக்கையில் இந்த நாவல் விற்றது என்பது குறிப்பிடத்தக்கது,

kotravai

3. கொற்றவை: தமிழினின் முதன்மையான எழுத்தாளர்களின் ஒருவரான ஜெயமோகன் எழுதிய நாவல் கொற்றவை. தமிழ்ப் பண்பாட்டில் மிகப் பெரிய இடம் கண்ணகிக்கு உண்டு. இந்த நாவலும் கண்ணகியைப் பற்றிய தீவிரமான எழுத்துமுறையில் எழுதப்பட்டது. சிலப்பதிகாரத்தின் கதைதான் என்றாலும் ஜெயமோகன் இதன் வழியே குமரி நிலத்தின் தொன்மையை மிக ஆழமாகக் கொண்டுசெல்கிறார். வெறும் நாவல்; கதை என்பதிலிருந்து நகர்ந்து புதிய வாசிப்பு அனுபவத்தை இந்தப் புதினம் நிச்சயம் கொடுக்கும். கொற்றவை நாவல் எழுதப்பட்டிருக்கும் மொழிநடையும் வாசகர்களை மிக லயித்து வாசிக்கவும் மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கவும் செய்யும்.

sulunthee_

4. சுளுந்தீ: எழுத்தாளர் முத்துநாகுவின் முதல் நாவல். ஆனால், எழுத்திலும் களத்தேர்விலும் அது நிச்சயம் வெளிப்பட வில்லை. பல்வேறு விருதுகளே அதற்கு சாட்சி. நாவிதர், பண்டிதர், மருத்துவர் என அழைக்கப்படும் சமூகத்தின் வாழ்க்கையை, அவர்களின் பூர்விகத்தை அசாத்திய மொழியால் எழுதியிருக்கிறார் முத்துநாகு. நாவிதர் சமூகத்தில் இருந்த இப்பவும் இருக்கும் மருத்துவ அறிவு மகத்தானது. அது எவ்வளவு மகத்தானது என்றுகூட தமிழில் அழுத்தமான பதிவுகள் இல்லை. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் ஏராளமான தகவல்களும் எளிய மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களும் சேர்ந்து முக்கியமான நாவலாகத் தந்திருக்கிறார் முத்துநாகு.


5. அஞ்ஞாடி: கரிசல் இலக்கியத்தின் முக்கியமான அடையாளம் எழுத்தாளர் பூமணி. அவரின் வெக்கை நாவலே அசுரன் எனும் திரைப்படமாக வெளிவந்தது. சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல் அஞ்ஞாடி. 1000 பக்கங்களுக்கும் அதிகம் உள்ள பிரமாண்ட நாவல். தென் மாவட்டங்களின் எளிய சமூகங்களின் வரலாற்றுப்பூர்வமான பதிவுகளே அஞ்ஞாடி. அம்மாடி என்பதன் வட்டார வழக்குச் சொல்லே அஞ்ஞாடி. இந்த நாவலில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் ஒவ்வொன்றும் ஆவணங்கள். தென் மாவட்டங்களில் நகரங்கள் உருவான கதை, இரு சமூகங்களில் ஏற்பட்ட தகறாறு என உன்னிப்புடன் கவனித்துப் படிக்க வேண்டிய நாவல்.

6. சூல்: கரிசல் இலக்கியத்தில் மிக அழுத்தமான பதிவுகளைப் பதித்துவரும் மூத்த எழுத்தாளர் சோ.தர்மன். அவரின் எழுத்தில் உருவான நாவலே சூல். சாகித்ய அகாடமியின் விருதைப் பெற்றது. விவசாயம் என்பது ஆதிமனிதனின் ஆகப்பெரும் அறிவிலிருந்து உருவான ஒன்று. ஆனால், அதை எல்லோரும் கைவிட்ட சூழலே இப்போது இருக்கிறது. அதன் அடிப்படையையும் எளிய மக்களின் வாழ்க்கையையும் வேதனையுடன் பதிவு செய்திருக்கும் நாவல் சூல். இது சோ.தர்மன் எழுதிய மூன்றாவது நாவல். சூழலியல் இலக்கியத்தில் முக்கியப் பங்கு இந்நாவலுக்கு உண்டு.

vennila

7. கங்காபுரம்: தமிழ் பென் எழுத்தாளார்களில் குறிப்பிடத்தகுந்த படைப்புகளை அளித்திருப்பவர் அ.வெண்ணிலா. கவிதை, சிறுகதை, கட்டுரைகள் எழுதியிருக்கும் வெண்ணிலாவின் முதல் நாவல் கங்காபுரம். மாமன்னன் ராஜேந்திர சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆயினும் ஒரு மன்னனில் உளவியல் சார்ந்த அம்சங்களையும் தாங்கியது. சோழர்களின் ஆட்சிக்காலம் பற்றிய ஆக்கப்பூர்வமான கருத்துகள் வருவதுபோலவே, கடும் விமர்சனங்களும் வரும் இந்தக் காலக்கட்டத்தில் கங்காபுரம் நாவல் வாசிப்பு பலவித எண்ணக் கதவுகளைத் திறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

pettai

8. பேட்டை: தமிழ் பிரபா எழுதிய முதல் நாவலிலேயே பலரின் கவனத்தை ஈர்த்துவிட்டார். பல விருதுகளையும் பெற்றுவிட்டார். தமிழ்நாட்டின் பிற பகுதிகளைப் பற்றிய நுண்மையான விவரிப்புகளோடு நாவல்கள் வந்திருக்கும் அளவுக்கு சென்னையைப் பற்றி வரவில்லை. அந்தக் குறையைத் தீர்க்கும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது பேட்டை. சின்னத்தரி பேட்டை சிந்தாதரிப் பேட்டையான வரலாற்றை மிக சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் தமிழ் பிரபா. சென்னை மொழிக்கான அழகோடு எழுதப்பட்டிருப்பது நாவல் எழுதப்பட்டிருக்கும் களத்தை வாசகருக்கு இன்னும் நெருக்கமாக்குகிறது.

sanjeevi-maamaa

9. சஞ்சீவி மாமா: பெரியவர்களுக்கான இலக்கியத்தைப் போல சிறுவர்களுக்கான இலக்கியத்தையும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம். சஞ்சீவி மாமா நாவலை எழுதியிருப்பவர் கொ.மா.கோ.இளங்கோ. தமிழில் தொடர்ந்து சிறார் இலக்கியம் படைத்துவருபவர் இவர். 20, 30 ஆண்டுகளுக்கு முன் கைகளால் மலம் அள்ளும் அவலம் எங்கும் இருந்தது, (இப்போதும் இருக்கிறது) அவர்களில் ஒருவரான சஞ்சீவி மாமாவைப் பற்றிய கதை. சமூக அக்கறை மிகுந்த கதை. சிறார் அவசியம் வாசிக்க வேண்டும்.

marappaachchi-sonna-ragasiyam-

10. மரப்பாச்சி சொன்ன ரகசியம்: இதுவும் சிறார் நாவல்தான். யெஸ்.பாலபாரதியின் எழுத்தில் உருவானது. குழந்தைகள் மீது பாலியல் வன்முறை அதிகரித்து வரும் இந்த்க் காலத்தில் இந்த நாவலை நம் வீட்டுச் சிறுவர்கள் அனைவரையும் படிக்கச் சொல்வது முக்கியம். பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு தவறாமல் சொல்லிக்கொடுக்க வேண்டிய சூழல். அதை அழகான, சுவாரஸ்யமான கதையோடு இணைத்து கொடுத்திருக்கிறார் யெஸ்.பாலபாரதி.

Most Popular

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...

மாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.

மிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால்...
Do NOT follow this link or you will be banned from the site!