கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் வேலை; 78 வயது மூதாட்டி உதவி – கலக்கும் காவல்துறை

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் வேலை; 78 வயது மூதாட்டி உதவி – கலக்கும் காவல்துறை

கொரோனா ஊரடங்கையொட்டி மக்களிடம் நேரிடையாக சந்தித்து குறைகளை பெற முடியவில்லை. அதனால், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்ற பிறகு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களிலும் பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 63691-00100 என்ற செல்போன் எண்ணில் ‘வாட்ஸ்-ஆப்’ வீடியோ கால் மூலம் குறைகளை கேட்டறிந்துவருகிறார். வாட்ஸ்அப் கால் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது கமிஷனரின் வாட்ஸ்அப் வீடியோ கால் வசதி விரிவுப்படுத்தப்பட்டது. அதனால் சென்னையில் உள்ள துணை கமிஷனர்களிடமும் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்கள் துணை கமிஷனர்களை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 12 துணை கமிஷனர்களிடம் பொதுமக்கள் தொடர்புக்கொண்டு பேச தனித்தனி செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பரங்கிமலை-70101 10833, அடையாறு-87544 01111, தியாகராயநகர் -90030 84100, மயிலாப்பூர்-63811 00100, திருவல்லிக்கேணி-94981 81387, கீழ்பாக்கம் -94980 10605, பூக்கடை-94980 08577, வண்ணாரப்பேட்டை -94981 33110, மாதவரம்-94981 81365, புளியந்தோப்பு -63694 23245, அண்ணாநகர் -91764 26100, அம்பத்தூர் -91764 27100 என வாட்ஸ்அப் நம்பர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 63691 00100 என்ற செல்போன் எண்ணில் பொதுமக்கள் ‘வாட்ஸ்-ஆப்’ வாயிலாக போலீஸ் கமிஷனருக்கு புகார்களை சுருக்கமாக அனுப்பி வைக்கலாம் என்றும், அந்த புகார்கள் முக்கியமாக இருக்கும் பட்சத்தில் புகார்களை அனுப்பியவர்களிடம் போலீஸ் கமிஷனர் ‘வாட்ஸ்-ஆப்’ காலில் தொடர்புக்கொண்டு பேசுவார்.

இந்தநிலையில் துணை கமிஷனர்களும் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பொதுமக்களிடம் பேசி குறைகளுக்கு நடவடிக்கை எடுத்துவருகின்றனர். சென்னை அடையாறு காவல் மாவட்ட துணை கமிஷனர் விக்ரமன். இவர், வாட்ஸ்அப்பில் பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். விக்ரமனின் வாட்ஸ் அப்பிற்கு ராதா என்பவர் சார், நான் வீட்டு வேலை செய்துவந்தேன். திடீரென கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். அதனால் என்னை வேலையிலிருந்து நீக்கிவிட்டனர். அதனால் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். ராதாவிடம் விசாரித்தபோது அவரின் வீடு கே.கே.நகர் பகுதி எனத் தெரியவந்தது. அதனால் அடையாறு துணை கமிஷனர் விக்ரன், தி.நகர் துணை கமிஷனர் ஹரிகிரணுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து துணை கமிஷனர் ஹரிகிரண், ராதாவின் வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு அவரிடம் விவரங்களைக் கேட்டார். அதன்பிறகு அந்தப் பெண் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளரை சந்தித்தார் துணை கமிஷனர் ஹரிகிரண். அப்போது கொரோனா எல்லோருக்கும் வரும். வீட்டு வேலை செய்த பெண்ணுக்கு கொரோனா வந்து அவர் பூரண குணமாகிவிட்டார். அவரால் இனிமேல் கொரோனா தொற்று பரவாது. எனவே ராதா அம்மாவுக்கு வேலை கொடுத்து அவரின் குடும்பத்துக்கு உதவுங்கள் என்று துணை கமிஷனர் ஹரிகிரண் கூறினார். அதைக்கேட்ட வீட்டின் உரிமையாளர் ராதாவுக்கு வேலை கொடுக்க சம்மதித்தார். அதனால் கண்ணீர்மல்க ராதா துணை கமிஷனர்கள் விக்ரமன், ஹரிகிரண் ஆகியோருக்கு நன்றி கூறினார். இந்தத் தகவலை துணை கமிஷனர் விக்ரமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் வேலை; 78 வயது மூதாட்டி உதவி – கலக்கும் காவல்துறை

இதற்கிடையில் அடையாறு காவல் சரகத்தில் துணை கமிஷனர் விக்ரமன், பதவி ஏற்ற முதல்நாளில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். தகவல் சொல்பவர்களின் விவரங்கள் ரகசியமாக இருக்கும். என ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். அடையாறு காவல் மாவட்டத்தில் அடையாறு, துரைப்பாக்கம், நீலாங்கரை, தரமணி, திருவான்மியூர், சாஸ்திரி நகர், செம்மஞ்சேரி, கிண்டி ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் அன்புகரசன், குற்றம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்தார். உடனடியாக அவருக்கு துணை கமிஷனர் விக்ரமன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் வேலை; 78 வயது மூதாட்டி உதவி – கலக்கும் காவல்துறை

கடந்த 2010-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்ற விக்ரமன், தமிழக காவல்துறையில் பணியாற்றி வருகிறார். பி.இ பட்டதாரியான இவர், மதுரை ராமநாதபுரம் கமுதி, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் ஏஎஸ்பியாக பணியாற்றியுள்ளார். அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் போது சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு எஸ்.பியாக பதவி உயர்வு பெற்ற அவர் கியூ பிராஞ்ச், திருவாரூர் எஸ்.பியாக பணியாற்றியவர். சென்னையைச் சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு ஆங்கில மொழிகளில் சரளமாக பேசவார். புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு வீடியோ கால் மூலமாக பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்புகொண்டு சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை பகுதியில் வசித்து வரும் தனது சகோதரர் 78 வயதான உறவுகார மூதாட்டியை சரிவர கவனிப்பதில்லை எனவும் ஊரடங்கு உள்ளதால் தன்னால் பெங்களூரில் இருந்து சென்னை வந்து உதவ முடியவில்லை எனவும் அதனால் உங்களது உதவியை நாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் வேலை; 78 வயது மூதாட்டி உதவி – கலக்கும் காவல்துறை
வீடியோ கால் மூலம் புகாரை பெற்று உடனடியாக ஓட்டேரி காவல் ஆய்வாளர் வள்ளி மற்றும் உதவி ஆய்வாளர் சீபா ஆகியோர் அந்த முகவரிக்கு சென்று மூதாட்டிக்கு தேவையான உதவிகளை செய்ததோடு,  அவரது சகோதரரை எச்சரித்தும் காவலர் ஒருவர் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கவும் செய்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலைத் தொடர்ந்து துணை கமிஷனர்களும் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் மக்களின் குறைகளை துரிதமாக செயல்பட்டுவருகின்றனர்.

எஸ்.செல்வம்