எங்களையும், நாட்டையும் இழிவுப்படுத்த டெல்லிக்கு வரவில்லை… போராட்டத்திலிருந்து விலகிய விவசாயி சங்கம்

 

எங்களையும், நாட்டையும் இழிவுப்படுத்த டெல்லிக்கு வரவில்லை… போராட்டத்திலிருந்து விலகிய விவசாயி சங்கம்

எங்களையும், நாட்டையும் இழிவுப்படுத்த டெல்லிக்கு வரவில்லை. பிரச்சினையில் எந்த திசையும் இல்லாத ஒருவருடன் நாங்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க முடியாது எனவே விவசாயிகளின் போராட்டத்திலிருந்து விலகிறோம் என்று ராஷ்ட்ரிய கிசான் மஜ்தூர் சங்கதன் அறிவித்துள்ளது.

டெல்லியின் பல எல்லைகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களாக அமைதியான வழியில் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் டிராக்டர் பேரணி நடத்தியபோது சில விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் டெல்லி போர்க்களமாக காட்சியளித்தது. தற்போது இது விவசாயிகளின் போராட்டத்துக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தில் அங்கம் வகித்த ராஷ்ட்ரிய கிசான் மஜ்தூர் சங்கதன் தற்போது போராட்டத்திலிருந்து விலகி விட்டது.

எங்களையும், நாட்டையும் இழிவுப்படுத்த டெல்லிக்கு வரவில்லை… போராட்டத்திலிருந்து விலகிய விவசாயி சங்கம்
வி.எம். சிங்

டெல்லியின் காசிப்பூர் எல்லையில் செய்தியாளர்களிடம் ராஷ்ட்ரிய கிசான் மஜ்தூர் சங்கதன் ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சிங். இது தொடர்பாக கூறியதாவது: பிரச்சினையில் எந்த திசையும் இல்லாத ஒருவருடன் நாங்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. நான் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் வி.எம். சிங் மற்றும் ராஷ்ட்ரிய கிசான் மஜ்தூர் சங்கதன் இந்த போராட்டத்திலிருந்து இப்போதே விலகுகிறார்கள். இது ராஷ்ட்ரிய கிசான் மஜ்தூர் சங்கதன் முடிவு, அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழுவின் முடிவு அல்ல. இது வி.எம். சிங், ராஷ்ட்ரிய கிசான் மஜ்தூர் சங்கதன் மற்றும் அனைத்து அலுவலர்களின் முடிவு.

எங்களையும், நாட்டையும் இழிவுப்படுத்த டெல்லிக்கு வரவில்லை… போராட்டத்திலிருந்து விலகிய விவசாயி சங்கம்
செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்

ராகேஷ் டிக்கைட் 5 முதல் 6 கூட்டங்களுக்கு (மத்திய அரசு-விவசாயிகள் சங்க தலைவர்கள் சந்திப்பு) சென்றார். அவர் ஒரு முறையாவது உ.பி. விவசாயிகளின் பிரச்சினைகளை எழுப்பினாரா? எங்களையும் மற்றும் நாட்டையும் இழிவுபடுத்தவோ அல்லது தியாகிகளை உருவாக்கவோ நாங்கள் இங்கு (டெல்லி எல்லை) வரவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதத்துக்காக நாங்கள் இங்கு போராட வந்தோம். கடந்த செவ்வாய்க்கிழமை விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.