கேபிள் டிவியில் க/பெ ரணசிங்கம்! இயக்குநர் காவல்நிலையத்தில் புகார்…

 

கேபிள் டிவியில் க/பெ ரணசிங்கம்! இயக்குநர் காவல்நிலையத்தில் புகார்…

நடிகர் விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் என்ற படத்தை தனியார் கேபிள் டிவியில் அனுமதியின்றி ஒளிபரப்பியதாக அப்படத்தின் இயக்குனர் விருமாண்டி, கதாசிரியர் சண்முகம் ராஜபாளையம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இந்த படம் கடந்த 2 ம் தேதி ஓ.டி.டி‌. டி.டி.ஹெச்சில் வெளியான நிலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் ராஜபாளையத்தில் இயங்கும் தனியார் கேபிள் டிவியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இது குறித்து விஜய் சேதுபதி ரசிகர்கள் அளித்த தகவலின் பேரில் அப்படத்தின் இயக்குனர் மற்றும் கதாசிரியர் நேரில் வந்து ராஜபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ரசிகர்கள் உதவியுடன் தனியார் கேபிள் டிவி அலுவலகத்திற்கு சென்ற அப்படத்தின் இயக்குனர் மற்றும் கதாசிரியர் கேபிள் டிவி அலுவலக பணியாளர்கள் மோகன் மற்றும் திருமுருக பிரவீன் ஆகிய இரண்டு ஊழியர்களையும், அலுவலகத்தில் இருந்த மூன்று கணினிகள் மற்றும் ஒரு செட்அப் பெட்டியை எடுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கேபிள் டிவியில் க/பெ ரணசிங்கம்! இயக்குநர் காவல்நிலையத்தில் புகார்…

புகாரளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் விருமாண்டி, “ஓடிடியில் வெளியாகும் படத்தை திருடி கேபிள் டிவியில் ஒளிபரப்புவது சட்டத்திற்குப் புறம்பானது. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும் சினிமாவை இதுபோன்று திருட்டுத்தனமாக கேபிள் டிவியில் ஒளிபரப்பினால் எங்களைப்போன்ற சினிமா ஊழியர்களின் வருமானம் பாதிக்கப்படுவதோடு சினிமாவில் சொல்லப்படும் நல்ல விஷயம் மக்களை சென்றடைவது தடுக்கப்படும். இதுபோன்ற திருட்டுத்தனம் தடுக்கப்பட வேண்டும். இப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாராகி உள்ளது.

ஜனவரி மாதம் தயாரான இப்படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிட வேண்டும் என நாங்கள் காத்திருந்த நிலையில், பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், வட்டியை கட்ட முடியாத சூழ்நிலையில் ஓடிடியில் வெளியிட்டோம். இப்படத்தை திருடி கேபிள் டிவியில் ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கின்றனர். இந்த படம் வெற்றி அடைவதன் மூலம் வரும் வருமானத்தை நம்பி பலர் உள்ளனர். இதுபோன்று புதிய சினிமாவை திருடி கேபிள் டிவியில் ஒளிபரப்பும் குற்றவாளிகள் மீது பைரசி சட்டத்தின் கீழ் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்றவர்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது. தயவுசெய்து பொதுமக்கள் பணம் கட்டி ஓடிடியில் படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.