நேரம் வரும் போது மக்களவையில் சீனா பற்றி பிரதமர் மோடி பேசுவார்… ராம்தாஸ் அதவாலே

 

நேரம் வரும் போது மக்களவையில் சீனா பற்றி பிரதமர் மோடி பேசுவார்… ராம்தாஸ் அதவாலே

மக்களவையில் சீனா தொடர்பான பேச்சு வரும் போது அது குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சீனா குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் சாதிக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சீனா என்ற வார்த்தையை சொல்லவே மோடிக்கு தைரியம் இல்லை என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சக்தி சிங் கோஹில், பிரதமர் மோடி சீனாவை பற்றி விவாதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

நேரம் வரும் போது மக்களவையில் சீனா பற்றி பிரதமர் மோடி பேசுவார்… ராம்தாஸ் அதவாலே
பிரதமர் மோடி

காங்கிரஸ் எம்.பி.யின் குற்றச்சாட்டுக்கு மத்தியமைச்சர் ராம்தாஸ் அதவாலே பதில் அளித்துள்ளார். ராம்தாஸ் அதவாலே இது தொடர்பாக கூறியதாவது: மக்களவையில் சீனா குறித்து விவாதம் வரும் போது பிரதமர் மோடி அது தொடர்பாக பேசுவார். விவசாயிகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஆகியவை மிகவும் முக்கியமானது, ஆகையால் முன்னுரிமை அடிப்படையில் அது குறித்து மோடி பேசினார்.

நேரம் வரும் போது மக்களவையில் சீனா பற்றி பிரதமர் மோடி பேசுவார்… ராம்தாஸ் அதவாலே
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

மேலும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ராம்தாஸ் அதவாலே கூறுகையில், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாபை சேர்ந்தவர்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான சட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய முடியும். ஆனால் முதலில் விவசாயிகளின் எதிர்ப்பு முடிவுக்கு வர வேண்டும். கடந்த 70 நாட்களுக்கு மேலாக இந்த போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த இயக்கத்தில் (போராட்டத்தில்) உயிர் இழந்தவர்களுக்கு யார் பொறுப்பு? உச்ச நீதிமன்றம் தடை விதித்த உடனே இந்த போராட்டம் கட்டாயம் முடிந்து இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.