கூட்டணியை மாற்றும் ராமதாஸ்? அதிமுக அரசை சாடியதால் சர்ச்சை

 

கூட்டணியை மாற்றும் ராமதாஸ்? அதிமுக அரசை சாடியதால் சர்ச்சை

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அதனால் இனி தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் பணியில் அதிமுக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைக்காலமாக விநாயகர் சிலை, இ-பாஸ் உள்ளிட்ட விவகாரங்களால் பாஜக – அதிமுக கூட்டணியில் பிரச்னை நீடிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

கூட்டணியை மாற்றும் ராமதாஸ்? அதிமுக அரசை சாடியதால் சர்ச்சை

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை….. செய்யவும் மறுக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆளும் அதிமுக உடன் கூட்டணியில் இருக்கும் பாமக, வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியில் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ராமதாஸின் இந்த ட்வீட் கூட்டணியில் சிக்கல் இருப்பதை வெளிகாட்டியுள்ளது. மேலும் பாமக, திமுக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், “தமிழக அரசுக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை” என விளக்கமளித்துள்ளார்.