ரஜினியின் குழப்ப அரசியல் – ஒரு சமானிய ரசிகனின் கேள்விகள்..

 

ரஜினியின் குழப்ப அரசியல் – ஒரு சமானிய ரசிகனின் கேள்விகள்..

ராகவேந்திரா மண்டபத்தில், ஒருமுறை ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, “என் கொள்கைகள் என்னென்ன என்று கேட்கும்போது கொள்கைகளா? எனக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திச்சு” அப்படின்னு ரசிகர்கள் கிட்ட சொன்னாரு.. அவர் மட்டும் குழப்ப நிலைக்கு செல்லவில்லை, தமிழக அரசியலையும் ஆரம்பத்தில் இருந்து குழப்பிக் கொண்டே இருக்கிறார். அவருடைய அரசியலே ஒரு குழப்பமான அரசியல்தான்.

குழப்பம் 1 – அரசியல் ஆசை

ரஜினியின் குழப்ப அரசியல் – ஒரு சமானிய ரசிகனின் கேள்விகள்..

அரசியல் ஆசை இல்லவே இல்லை என சொல்லிக்கொண்டே, சில படங்களில் அதை வித்தியாசமான முறையில் கையாள்வது அவருடைய யுக்தி. அதாவது “நான் அரசியலுக்கு வர மாட்டேன், எனக்கு அரசியல் ஆசை இல்ல” என திரும்ப திரும்ப சொல்வதன் மூலமாக “எனக்கு அரசியல் ஆசை இருக்கிறது, ஆனால் நானாக அரசியலுக்கு வந்ததாக இருக்கக்கூடாது, ரசிகர்களே அழைத்ததாக இருக்க வேண்டும்” என்பதே அவர் எண்ணமாக இருந்தது. அவருடைய படங்களில் “என்னால தலைவன் பதவிக்கு ஈஸியா வர முடியும், ஆனா எனக்கு அது வேணாம். கட்சியெல்லாம் இப்பொ நமக்கெதுக்கு, காலத்தின் கையில் அது இருக்கு. கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன் காலத்தின், கட்டாயத்தை நான் மறுக்க மாட்டேன்” போன்ற வசனங்களாலும் பாடல்கள் மூலமாகவும் தொடர்ந்து தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தி கொண்டே இருந்தார். தன்னை அரசியலுக்கு வரவைக்கும் முயற்சி, ரசிகர்கள் வேலை என்பது போல காய் நகர்த்தினார். இதனால் அவரை அரசியலோடு சம்பந்தப்படுத்தி ரசிகர்கள் பேசத் தொடங்கினர்.

குழப்பம் 2 – அரசியல் நிலைபாடு

ரஜினியின் குழப்ப அரசியல் – ஒரு சமானிய ரசிகனின் கேள்விகள்..

1996 ஆம் ஆண்டு கொடுத்த பேட்டிதான், வெளிப்படையான அரசியல் வாழ்க்கைக்கு முதல் படியாக இருந்தது. அந்த பேட்டியில் “அரசியல் வேறு ஆன்மீகம் வேறு. இரண்டும் இணைய முடியாது. பாம்பும் கீரியும் போல” என்று தெளிவாக கூறியிருந்தார். ஆனால் இன்றோ “ஆன்மீக அரசியலை நடத்துவேன்” என்று கூறுகிறார். அரசியலுக்கு வருவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை கூறிவிட்டு, அரசியலுக்கு வந்தால் எப்படிப்பட்ட ஆட்சியை தருவேன் என்பதை பேசியதுதான் அவரது அரசியல் ஆசையை வெளிப்படுத்தியது.

குழப்பம் 3 – ரசிகர்கள்மேல் பாசமா ? சுரண்டலா ?

எப்போது அரசியலுக்கு வருவார் என காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு, நான் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்று கூறியதுடன், “எம்ஜிஆர் போன்று ஆட்சியை தருவேன்” என்றும் நம்பிக்கை அளித்தார். சமீபத்தில் ஒரு ஊடக பேட்டியில், ”நான் முதலமைச்சர் வேட்பாளராக இருக்க விரும்பவில்லை, வேறு ஒருவரை முதலமைச்சராக காட்டப் போகிறேன்” என கூறினார். எம்ஜிஆர் 9 வருட அரசியல் வாழ்க்கைக்கு பின்னரே முதலமைச்சராக ஆனவர். ஆனால் ரஜினியோ, தேர்தலுக்கு 3 மாதங்கள் இருக்கும் நிலையில், தன் கட்சியையும், அவருக்கு கிடைக்க இருக்கும் தேர்தல் சின்னத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து வெற்றி பெறுவது என்பது எம்ஜிஆர் பாணி போல் தெரியவில்லை.

ரஜினியின் குழப்ப அரசியல் – ஒரு சமானிய ரசிகனின் கேள்விகள்..

“ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன்” என்கிற அளவில் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவரோ, “தன் ரசிகர்கள் கடமையைச் செய்து, பலனை எதிர்பார்க்கக் கூடாது, ஒரு திருமணம் என்றால், அந்த வேலையாட்களை அதற்கு மட்டும் வைத்துவிட்டு அனுப்பிவிட வேண்டும், வீட்டிலேயே வைத்திருக்க மாட்டோம். எனவே ரசிகர்களும் அதேபோல் எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் வேலை செய்ய வேண்டும்” என்று பேசுகிறார். அதாவது, தான் சொல்லும் நபரை ஆட்சியில் அமர்த்த ரசிகர்கள் உழைக்க வேண்டும் என்கிறார். இந்த உழைப்புச் சுரண்டல் குறித்து ரஜினி கொஞ்சம்கூட வருத்தப்பட்டதாக தெரியவில்லை.

குழப்பம் 4 – பாஜக எதிர்ப்பு

ஆன்மிக அரசியலை நடத்துவேன் என்று அவர் கூறிய நாளிலிருந்தே, அவர் பாஜகவின் இந்துத்துவ அரசியலை நடத்த போகிறார் என்று பல்வேறு விமர்சனங்கள் வந்தன. அதுபோலவே தனது படங்களில், தொடர்ந்து இந்துத்துவ அரசியலை முன்னெடுத்தும் வருகிறார். அதேநேரத்தில் சமீப காலங்களில் நடித்த காலா, கபாலி, பேட்ட, தர்பார் படங்களில் இந்துத்துவ அரசியலை எதிர்ப்பதுபோல பல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். படையப்பா, கோச்சைடையான், குசேலன், பாபா என தனது படங்களுக்கு இந்துத்துவா அடையாளம் கொடுத்தவர், சமீப படங்களில் இந்துத்துவாவை எதிர்ப்பதுபோல நடித்ததிலும் உள்நோக்கம் உள்ளது.

ரஜினியின் குழப்ப அரசியல் – ஒரு சமானிய ரசிகனின் கேள்விகள்..


தமிழகத்தில் இந்துத்துவா வாக்குகள் எடுபடாது, இந்துத்துவத்தை எதிர்த்த திராவிட கட்சிகளே ஆட்சியில் இருக்கின்றன. எனவே திராவிட வாக்குகளை பெற வேண்டுமென்றால், இந்துத்துவத்தையும் பாஜகவையும் எதிர்க்க வேண்டும் என்று ரஜினி சாதுர்யமாக நகர்த்திய காய்கள் அவை. படங்களில் மட்டுமல்ல, நேரிலும் பாஜகவை எதிர்த்த சம்பவங்கள் உள்ளன. திருவள்ளுவரின் மீது காவி சாயம் பூசுவது பற்றி ரஜினியிடம் கேட்ட போது “திருவள்ளுவருக்கு மட்டுமல்ல எனக்கும் காவி சாயம் பூச முயல்கின்றனர், அது நடக்காது” என்று கூறினார்.
திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது பாஜக. எனவே அவர் எதிர்த்தது நேரடியாக பாஜகவை என்று நாம் அறியலாம். (ஆனால் அன்று மாலையே அதற்கு வேறொரு விளக்கம்கொடுத்தார் என்பது தனி கதை). இந்தி திணிப்பு தவறானது, அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி..அந்த போக்கை விட்டுவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதன்மூலம் பாஜகவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் ரஜினி கூறி வந்துள்ளார்.

குழப்பம் 4 – பாஜக சார்பு

ரஜினி பாஜகவை ஆதரிக்கவில்லை, பாஜகதான் ரஜினியே இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று மக்கள் நம்பத் தொடங்கினர். ஆனால் சமீபத்திய கட்சி அறிவிப்பின்போது, பாஜக அறிவுசார் அமைப்பில் இருந்த அர்ஜுண மூர்த்தியை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிமுகப்படுத்தியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அர்ஜுண மூர்த்தியிடமே “ஒருங்கிணைப்பாளர் தானே சொல்லணும்?” என ரஜினி கேட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமித்ஷா, மோடி, குருமூர்த்தி என பாஜகவினர் அவ்வப்போது ரஜினியை சந்திப்பதே இந்த குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் என்று சிலர் கருதுகின்றனர்.

ரஜினியின் குழப்ப அரசியல் – ஒரு சமானிய ரசிகனின் கேள்விகள்..

பாஜக தன்னை இன்ஃப்ளுயன்ஸ் செய்து இருந்தாலும் தன் சுயஅரசியல் நிலைப்பாட்டில் ரஜினி உறுதியாக இருந்திருக்க வேண்டியது அவசியம். அல்லது ரஜினி பாஜக சார்பு அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது வாக்குகளை பிரிப்பதிலோ குறியாக இருப்பார் என்றால் அப்படிப்பட்ட அரசியல் நிலைபாட்டினை ரசிகர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் ரஜினி சொல்லும் இடத்தில் நாங்கள் ஓட்டு போடுவோம் என்று அவரது ரசிக தொண்டர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது. எனவே தமது அரசியலை ரசிகர்களிடம் திணிக்கக் கூடாது. அப்படிப்பட்ட நிலையில், 2+2=5 என்று ஒரு அரசியல் தலைவர் கூறினாலும் அதை அப்படியே கேட்டு விட்டு மண்டை ஆட்டிக்கொண்டு அவர் பின்னால் செல்வது என்பது மடத்தனம். தலைவர் செய்யும் தவறை அவருடன் இருக்கும் தொண்டன் சுட்டிக்காட்டி சரி செய்வதே, மக்களுக்கான அரசியலாக அமையும். அரசியல் மக்களுக்கானது, அரசியல் தலைவர்கள் என்பவர்கள் மக்களுக்கானவர்கள். மக்கள் தொண்டர்களாக மாறினால், தலைவர்கள் மக்களுக்கு தொண்டு செய்யாமல் தொண்டர்களுக்கு அரசியல் செய்வதாக மாறிவிட்டது. இந்த நிலையில், தனக்காக உயிரையே தியாகம் செய்யத் துணியும் தொண்டர்களை, ரஜினி எண்ணிப் பார்த்து அத்தகைய தொண்டரின் வாழ்க்கைக்கு நலன் பயக்கும் விதமான அரசியலில் இறங்க முடிவு செய்ய வேண்டும். அப்படி செய்தால் சிறந்த அரசியல் தலைவருக்கான இடத்தை வரலாறு உறுதி செய்யும்.

சி.பிரபாகரன்