Home அரசியல் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! சமூக வலைதளத்தில் உலாவரும் ரஜினியின் கடிதம்…

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! சமூக வலைதளத்தில் உலாவரும் ரஜினியின் கடிதம்…

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். ஆனால் அதன்பிறகு ரஜினி அரசியல் யுத்தத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியும் தொடங்கவில்லை. வருகிற நவம்பர் மாதம் ரஜினி கட்சி தொடங்கவுள்ளார் என்றும், டிசம்பரில் மதுரையில் மாநாடு நடத்துகிறார் என்றும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போதுவரை எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் ரஜினியின் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்த கடிதத்தில், “என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்புக்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு.

This image has an empty alt attribute; its file name is rajinikanth_20200224_571_855.jpg

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் – அரசியல் மாற்றத்துக்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்

இந்தக் கொரோனா பிரச்னையினால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை.

2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்குச் சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.

கொரோனா தொற்று எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில் எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு மருத்துவர்கள், “கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும் அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக் கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்கு சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களை விட உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக் கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல் நலத்தையும் நிச்சயம் கடுமையாகப் பாதிக்கும். ஆகையால் இந்தக் கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

எனக்கு என் உயிர் பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் குறித்துதான் கவலை. நான் தொடங்குவதோ புதுக் கட்சி. மக்களை நேரில் சந்திக்காமல், மாநாடுகள் நடத்தாமல், பொதுக்கூட்டங்கள் கூட்டாமல் வெறும் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால், நான் எதிர்பார்க்கும் அரசியல் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கி அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து, இடையில் என் உடல் நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும்.

இதை இப்போதே சொல்லக் காரணம், என்னை ஆதரிப்போரின் மத்தியில் நான் அரசியலுக்கு வருவேன் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில், இந்தக் கொரோனா பிரச்னை தொடரும் நிலையில், கடைசி நேரத்தில் இந்தக் காரணங்களைக் காட்டி ஒருவேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும். நான் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும். இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு. எனவே அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, என் உடல் நலத்தில் அக்கறையுள்ள என்னை வாழ வைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய ரசிகர்களும், மக்களும் என்னை என்ன முடிவு எடுக்கச் சொன்னாலும் அதனை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

கிளர்ச்சியில் ஈடுபடாதீங்க.. டிசம்பர் 3ம் தேதி பேசுவோம்.. விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர்

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான வேறுபாடுகளை தீர்க்க விவசாயிகளை டிசம்பர் 3ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

இயற்கைக்கு மாறான இந்த மகா விகாஸ் அகாடி அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது.. தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான இயற்கைக்கு மாறான இந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

இரவு ஊரடங்கால் உற்சாகமான திருடர்கள்… குஜராத்தில் கடைகளை உடைத்து பல லட்சம் பொருட்கள் கொள்ளை

குஜராத்தில் அமலில் உள்ள இரவு ஊரடங்கை பயன்படுத்தி, கடைகளை உடைத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி,...

நம் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதாக 47 சதவீத மக்கள் தகவல்… ஆய்வு முடிவு

நம் நாட்டில் கடந்த 12 மாதங்களில் ஊழல் அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்பில் ஒன்றில் 47 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் ஆசிய பிராந்திய...
Do NOT follow this link or you will be banned from the site!