’ரஜினி வாய்ஸ்’ இனி இல்லை – விரக்தியில் தமிழக பாஜக!

 

’ரஜினி வாய்ஸ்’ இனி இல்லை – விரக்தியில் தமிழக பாஜக!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கடந்த 25 ஆண்டுகளாக அவரின் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், ரஜினி தனது உடல்நிலையைக் காரணமாகக் கூறி அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாகவும் இனி கட்சி தொடங்கப் போவதில்லை என்றும் தெளிவாக நீண்ட அறிக்கை மூலம் வெளிப்படுத்தி விட்டார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களைக் காட்டிலும் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது பாரதிய ஜனதா கட்சியினருக்குத்தான். ஏனெனில், தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க ரஜினி பெரிய அளவில் உதவுவார் என்று பாஜகவினர் நினைத்தனர். இந்தத் தேர்தலில் அதிகளவு பாரதிய ஜனதா கட்சி சட்டமன்றத்திற்குள் செல்ல ரஜினி ஆதரவு உதவும் என்றும் நம்பினர்.

’ரஜினி வாய்ஸ்’ இனி இல்லை – விரக்தியில் தமிழக பாஜக!

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் கடைசி நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் ஆதரவு என்கின்ற வாய்ஸ் கொடுப்பார் என்று பத்திரிகையாளர் குருமூர்த்தி தொடங்கி பாஜக தலைவரை நம்பியது. ஆனால் கடந்த சில நாட்களாக ரஜினி மன்ற நிர்வாகிகள் பல கட்சிகளுக்குச் செல்வது நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நான்கு மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்துள்ளனர். இது பாஜகவினருக்கு வியப்பைத் தந்தது. ஏனெனில் ரஜினி ரசிகர்கள் தம் கூட்டணிக்கு வேலை பார்ப்பார்கள் என்று பாஜகவினர் நினைத்தனர். அதற்கு மாறாக தங்களுக்கு எதிரியாக பாரதிய ஜனதா கட்சியினர் சித்தரிக்கும் திமுகவில் சேர்ந்தது ஆச்சரியம்தானே.

ரஜினிகாந்த் இப்படி கட்சியில் சேர்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார், ரஜினி மன்ற நிர்வாகிகள் எந்த கட்சிக்கும் செல்லக்கூடாது என்று அறிக்கை வெளியிடுவார் என்று பாஜக தரப்பில் நினைத்தது. ஆனால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ரஜினி மன்ற நிர்வாகிகள் ரசிகர்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம். ஆனால், அதற்கு முன் ரஜினி மன்ற பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் எந்தக் கட்சிக்கு போனாலும் ரஜினி ரசிகர்கள் என்பதை மறக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த வரிதான் பாஜகவினருக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

’ரஜினி வாய்ஸ்’ இனி இல்லை – விரக்தியில் தமிழக பாஜக!

ரஜினி மன்ற தலைமை அதிகாரப்பூர்வமாக தங்கள் நிர்வாகிகள் ரசிகர்கள் வேறு கட்சிக்கு செல்வதற்கு அனுமதி அளித்ததை போல இந்த அறிக்கை அமைந்துவிட்டது. ரஜினி மன்றத்தின் பலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் வெளியேறினால் முழுக்கவே கலகலத்து விடும். அதன் பின் அவர்களை வைத்து இந்தத் தேர்தலில் எந்தப் பலனையும் அறுவடை செய்ய முடியாது என்று பாஜகவினர் நினைக்கின்றனர்.

ரஜினியின் இந்த அறிவிப்பு பாஜகவினருக்கு பெரும் விரக்தி தந்துள்ளது. ஏனெனில் இறுதிகட்டத்தில் ரஜினியின் ஒரு ஆதரவு வீடியோ எனும் பிரமாஸ்திரம் பொய்யாகிவிட்டது இந்த அறிக்கை. இது தவிர இன்னும் என்னென்ன முயற்சிகளை பாஜகவினர் எடுப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.