திமுகவில் இணையவில்லை… ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி பகீர் பேட்டி

 

திமுகவில் இணையவில்லை… ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி பகீர் பேட்டி

புதிய கட்சி தொடங்கப் போவதாக பல ஆண்டுகளாக கூறி வந்த ரஜினிகாந்த், கடந்த நவம்பர் மாதம் அதனை உறுதிப்படுத்தினார். அதற்கான பணிகளையும் மும்முரமாக தொடங்கினார். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கிற்கு சென்று வந்த ரஜினிகாந்த், உடல்நிலை காரணத்தால் அரசியல் பயணத்தில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தார். அதற்கு மக்களிடம் மன்னிப்பும் கோரினார். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று காத்துக் கிடந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதனால் ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினி மக்கள் மன்றத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தியும் ரஜினி தனது முடிவை மாற்றிக்கொள்வதாக இல்லை.

திமுகவில் இணையவில்லை… ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி பகீர் பேட்டி

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில், தேனி மாவட்ட செயலாளர் ஆர்.கணேசன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கே.வி.எஸ். சீனிவாசன் ஆகியோரும் திமுகவில் இணைந்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தான் திமுகவில் இணையவில்லை என்றும், பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கே.வி.எஸ். சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், “நான் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக தொடர்ந்து செயல்படுவேன். நான் திமுகவில் இணைந்ததாக செய்தி தொலைக்காட்சிகளில் தவறான தகவல் வெளியிட்டுள்ளனர். இதனை யாரும் நம்ப வேண்டாம். நான் எப்போதும் தலைவரின் வழியில் எனது பணியை தொடர்ந்து மேற்கொள்வேன். எனவே, திமுகவில் இணைந்ததாக வெளியாகும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்” என்றும் கூறியுள்ளார்.