தன்னுடைய இமேஜை உயர்த்துவதிலேயே பிரதமர் கவனம் செலுத்துகிறார்: ராகுல்காந்தி

 

தன்னுடைய இமேஜை உயர்த்துவதிலேயே பிரதமர் கவனம் செலுத்துகிறார்: ராகுல்காந்தி

பிரதமர் நரேந்திர மோடி தனது சுய பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சியில் 100 சதவீதம் கவனத்தை செலுத்துகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சீனாவை எதிர்கொள்வதற்கு தொலைநோக்கு பார்வை வேண்டும். தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அது இருக்க வேண்டும். நமது அணுகுமுறை மற்றும் நமது யோசனைகளை மாற்ற வேண்டும். நீண்ட காலத்திற்கு நாம் யோசிப்பதில்லை. நமக்குள்ளேயே சண்டையிட்டுக்கொள்வதால் நம்மால் பெரிதாக யோசிக்க முடியவில்லை.  நமக்குள்ளாகவே நாம் சண்டையிட்டு கொள்கிறோம். அரசியலை பாருங்கள். இந்தியன் இந்தியனுடன் சண்டையிடுகிறான். எனவே முன்னோக்கி செல்வதற்கான எந்த தெளிவான பார்வையும் நம்மிடம் இல்லை.

பிரதமர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பது எனக்கு தெரியும். அவரை கேள்வி கேட்பது எனது கடமை. கேள்வி கேட்டு பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து அவரது பணியை செய்ய வைப்பது எனது கடமை. பிரதமரின் பணி தொலைநோக்கு பார்வையை அளிப்பது. ஆனால் அது இல்லை. தொலைநோக்கு பார்வை இல்லை என்பதை உறுதியாக சொல்வேன். அதனால் தான் சீனா இன்று நமது எல்லைக்குள் இருக்கிறது. சுய பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சியில் பிரதமர் 100 சதவீதம் கவனத்தை செலுத்துகிறார்.  இந்தியாவின் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் இந்த சுய பிம்ப கட்டமைப்பில் மும்முரம் காட்டி வருகின்றன. ஓர் தனி நபரின் பிம்பம் ஒரு நாட்டின் தொலைநோக்குப் பார்வைக்கு மாற்றாக இருக்க முடியாது” என கூறப்பட்டுள்ளது.