பொய்களை பேசுவதில் பிரதமர் மோடியுடன் போட்டியிட முடியாது… ராகுல் காந்தி கிண்டல்

 

பொய்களை பேசுவதில் பிரதமர் மோடியுடன் போட்டியிட முடியாது… ராகுல் காந்தி கிண்டல்

பீகாரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பொய்களை பேசுவதில் பிரதமர் மோடியுடன் எங்களால் போட்டியிட முடியாது என்று ராகுல் காந்தி கிண்டல் அடித்தார்.

பீகார் மாநிலம் வால்மீகி நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: பிரதமர் மோடி தற்போதைய தனது பேச்சுகளில் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக சொல்லவில்லை. அவர் பொய் சொன்னார் என்பது அவருக்கு தெரியும், மக்களுக்கும் அது தெரியும். பிரதமர் இங்கு வந்து 2 கோடி வேலைகள் கொடுப்பதாக சொன்னால் கூட்டம அவரை வெளியே விரட்டும் என்று நான் உறுதியளிக்கிறேன். காங்கிரஸ் நாட்டுக்கு வழிகாட்டியது. நாங்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், விவசாயிகள் கடன் தள்ளுபடி கொடுத்தோம். நாட்டை எப்படி நடத்துவது எப்படி என்பது எங்களுக்கு தெரியும், விவசாயிகளுடன் நின்று, வேலைவாய்ப்பை உருவாக்கினோம்.

பொய்களை பேசுவதில் பிரதமர் மோடியுடன் போட்டியிட முடியாது… ராகுல் காந்தி கிண்டல்
பிரதமர் மோடி

ஆனால் ஆமாம், எங்களிடம் ஒரு விஷயம் இல்லை. எங்களுக்கு எப்படி பொய் பேசுவது என்பது தெரியாது. பொய் பேசுவதில் அவருடன் (மோடியுடன்) எங்களால் போட்டியிட முடியாது. பாட்னாவுக்கு மக்கள் வேலை தேடி வரும் நாளை பார்க்க விரும்புகிறேன். பணப்மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வங்கிகளில் உங்கள் பணத்தை டெபாசிட் செய்தீர்கள். நாட்டின் பெரிய தொழில்அதிபர்களின் ரூ.3.50 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய உங்கள் பணத்தை மோடி பயன்படுத்தினார். லாக்டவுனிலும் அதையே செய்தார், அவர்களின் கடனை தள்ளுபடி செய்தார் மற்றும் வரி தள்ளுபடி வழங்கினார்.

பொய்களை பேசுவதில் பிரதமர் மோடியுடன் போட்டியிட முடியாது… ராகுல் காந்தி கிண்டல்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

பீகாரில் நீங்கள் வேலை செய்ய முடியாது. இதுதான் யதார்த்தம். மாநிலத்தின் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளிடம் பிரச்சினை இல்லை. உங்களது முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பிரதமருடன் பிரச்சினை உள்ளது. அவர்கள் உங்களிடம் உண்மையை சொல்ல மாட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் மோடி 2 கோடி வேலைவாய்ப்பு வாக்குறுதி கொடுப்பார். லாக்டவுன் சமயத்தில் பல லட்ச கணக்கான தொழிலாளர்கள் மாநிலத்துக்கு திரும்பியதை பார்த்தீர்கள். இது தேர்தல் நேரம், அதை மறந்து விடாதீர்கள். பஸ் மற்றும் ரயில்கள் இல்லை. மோடி உங்களை காலால் நடக்க கட்டாயப்படுத்தினார். தசரா அன்று பஞ்சாபில் மோடியின் உருவபொம்மையை எரித்தார்கள். நான் வேதனை அடைந்தேன். ஆனால் விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் அவருக்கு எதிராக கோபத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.