ஜூலை போய்விட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை.. பா.ஜ.க. அரசை குற்றம்சாட்டிய ராகுல் காந்தி

 

ஜூலை போய்விட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை.. பா.ஜ.க. அரசை குற்றம்சாட்டிய ராகுல் காந்தி

ஜூலை போய்விட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தடுப்பூசி முக்கிய ஆயுதமாக பார்க்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, நம் நாட்டில் இதுவரை 46.15 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேசமயம் பல மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக புகார் கூறி வருகின்றன. ஆனால் மத்திய அரசோ மாநில அரசுகளிடம் போதிய அளவு தடுப்பூசி உள்ளதாக புள்ளிவிவரத்தை வெளியிடுகிறது.

ஜூலை போய்விட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை.. பா.ஜ.க. அரசை குற்றம்சாட்டிய ராகுல் காந்தி
கோவிட் தடுப்பூசிகள்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ஜூலை போய்விட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை என்று பதிவு செய்து இருந்தார். கடந்த மாதம் 2ம் தேதியன்று ராகுல் காந்தி டிவிட்டரில், ஜூலை வந்து விட்டது, தடுப்பூசி வந்து சேரவில்லை என்று பதிவு செய்து இருந்தார்.

ஜூலை போய்விட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை.. பா.ஜ.க. அரசை குற்றம்சாட்டிய ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடி

மத்திய அமைச்சர் அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி அண்மையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு இந்திய தடுப்பூசிகள் மீது நம்பிக்கை இல்லை என்று குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு ராபர்ட் வத்ரா, தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் அதனால் தடுப்பூசி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதியன்று ராகுல் காந்தி முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. அதே உறுதி செய்வது போல், ராகுல் காந்தி கடந்த 29 மற்றும் 30ம் தேதியில் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.