நவம்பரில் கட்சி ஆரம்பிப்பீர்களா? இப்போ இல்லைனா வேற எப்போ? – ரஜினியிடம் ராகவா லாரன்ஸ் கேள்வி

 

நவம்பரில் கட்சி ஆரம்பிப்பீர்களா? இப்போ இல்லைனா வேற எப்போ? – ரஜினியிடம் ராகவா லாரன்ஸ் கேள்வி

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். ஆனால் அதன்பிறகு ரஜினி அரசியல் யுத்தத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியும் தொடங்கவில்லை. வருகிற நவம்பர் மாதம் ரஜினி கட்சி தொடங்கவுள்ளார் என்றும், டிசம்பரில் மதுரையில் மாநாடு நடத்துகிறார் என்றும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியானது. இதனிடையே சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தனக்கு முதல்வராகும் ஆசை இல்லை என்றும், கட்சி தலைமை வேறாகவும், ஆட்சி வேறாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அவரது முந்தைய அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்தவாரம் ரஜினியின் ஆன்மீக அரசியலில் தானும் இணையப்போவதாகவும் எதிர்வினை ஆற்றாமல் யாரையும் புண்படுத்தாமல் கட்சி ஆரம்பிக்க அது என்னுடைய குரு ரஜினிகாந்த் என்றும் நடிகர் லாரன்ஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ட்விட்டரில் ஒரு கடிதத்தை ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளார். அதில், “எதிர்காலத்தில் வேண்டுமானால் முதல்வர் வேட்பாளராக வேறு யாரையாவது அறிவித்துக்கொள்ளுங்கள். ஆனால் இந்த முறை நீங்கள் தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதுதான் அனைத்து ரசிகர்களின் விருப்பமும். நீங்க வந்தா நாங்க வரோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.