ரஜினி ஆன்மீக அரசியலை தொடங்கிய பிறகு அவருடன் இணைந்து பணியாற்ற தயார்- ராகவா லாரன்ஸ்

 

ரஜினி ஆன்மீக அரசியலை தொடங்கிய பிறகு அவருடன் இணைந்து பணியாற்ற தயார்- ராகவா லாரன்ஸ்

இந்தியாவில் எதிர்வினை இல்லாமல் யாரையும் காயப்படுத்தாமல் ரஜினிகாந்தால் மட்டுமே கட்சி தொடங்க முடியும் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வணக்கம் நண்பர்கள் மற்றும் ரசிகர்களே… கடந்த மாதம் நான் ஒரு பதிவை பதிவிட்டிருந்தேன். அதில் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு சேவை செய்ய உள்ளேன் என தெரிவித்திருந்தேன். அப்படி சொன்னதற்கான விளக்கத்தை தற்போது அளிக்கவுள்ளேன். நான் பல சேவைகள் செய்து வருகிறேன். அந்த சேவைகள் அரசியலில் இறங்குவதற்காக செய்கிறீர்களா என்னிடம் பல நண்பர்கள், ரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடக நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். சிலர் நீங்கள் அரசியலுக்கு வந்தால் இதை விட அதிகமான சேவைகளை செய்யமுடியும் என எனக்கு அறிவுறுத்தினர். அனைவருக்கும் சொல்ல விரும்புவது ‘நான் ஒரு சாதாரண மனிதன்’. என்னால் முடிந்ததை பிறருக்கு செய்ய விரும்புகிறேன். அதையே செய்து கொண்டிருக்கிறேன். இதற்கு முன்பு கலைஞர், ஜெயலலிதா ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் என பலர் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். அதேபோல எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் என அனைவரும் எனக்கு உதவி செய்துள்ளனர். தனிமனிதனாக தற்போது செய்யும் சேவைகளை விட நான் அரசியலில் இருந்தால் இன்னும் அதிக சேவைகள் செய்ய முடியும் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் எதிர்மறை அரசியல் எனக்கு பிடிக்காது.

அரசியலில் இறங்கி விட்டால் எதிர்மறையாக ஒருவரை பற்றி பேச வேண்டியிருக்கும். எதிர்வினை ஆற்றாமல் யாரையும் புண்படுத்தாமல் கட்சி ஆரம்பிக்க அது என்னுடைய குரு ரஜினிகாந்த் – ஆல் மட்டுமே முடியும். அரசியல் காரணத்திற்காகவும் அவர் யாரையும் காயப்படுத்தியது இல்லை. இனியும் யாரையும் காயப்படுத்தமாட்டார் என நம்புகிறேன். ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் தொடங்கினால் அவருடைய பல லட்சம் தொண்டர்களில் நானும் ஒருவனாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.