Home ஆன்மிகம் சூரியதேவனே விமோசனம் பெற்ற சொர்ணாம்பிகை உடனாய புஷ்பரதேஷ்வரார் திருக்கோவில்!

சூரியதேவனே விமோசனம் பெற்ற சொர்ணாம்பிகை உடனாய புஷ்பரதேஷ்வரார் திருக்கோவில்!

சூரியன் அதாவது ஞாயிறு சிவனை வழிபட்ட ‘பஞ்ச பாஸ்கரத் தலங்கள்’ என்று போற்றப்படும் ஐந்து திருத்தலங்களில் ஒன்று சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சூரியன் வழிபட்டதாலேயே இத்தலத்திற்கு ஞாயிறு என்ற பெயர் உண்டாயிற்று.

ஞாயிறு கிராமத்தில் சூரியன் வழிபட்ட ஈசன் சொர்ணாம்பிகை உடனாய புஷ்பரதேஷ்வரார் என்ற திருநாமம் ஏற்று திருக்கோயில் கொண்டுள்ளார்.

ஆதிநாளில் பிரம்மனின் சாபத்துக்கு ஆளான சூரியன் , விமோசனம் பெற இத்தலத்தில் ஈசனை நோக்கி தவமிருந்தார். ஈசன் அகன்ற செந்தாமரை பூவில் தோன்றி காட்சி அளித்து சூரியனுக்கு சாப விமோசனம் வழங்கி அருள் புரிந்தார்.

தாமரை மவரில் இருந்து சுயம்புவாய் எழுந்தால் ஈசன் புஷ்பரதேஷ்வரார் என்று திருநாமதுடனும் அம்பிகை சொர்ணாம்பிகை என்ற திருநாமம் ஏற்றும் ஞாயிறு கிராமத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

பிற்காலத்தில் பக்கத்து நாட்டின் மீது படையெடுத்து சென்ற சோழ மன்னன் ஒருவன் வழியில் இப்பகுதியில் தங்கியிருந்தார். ஒருநாள் அங்குள்ள குளத்தில் பூத்திருந்த தாமரை மலரை பறிக்க எண்ணினான். கைக்கு எட்டாததால் வாளை வீசினான் . அது பூவின் கீழ் இருந்த லிங்கத்தின் மீது பட்டு ரத்தம் கொட்டியது. குளமே ரத்தம் ஆனது.

அதிர்ந்த மன்னன் சுயம்புவான லிங்கத்தை வெளியே எடுத்து குளக்கரையில் கோயில் எழுப்பி வழிபாடு நடத்தி ஈசனை பணிந்து தன் தவறுக்கு பரிகாரம் தேடி பாவமன்னிப்பு பெற்றான் . இன்றும் புஷ்ப ரதேஷ்வரர் ஆலய சிவ லிங்கத்தின் மேல் வாள் பட்ட சுவடு உள்ளது.

ஈசனுக்கு எதிரிலேயே வலப்புறம் சூரியனுக்கு அழகிய அற்புதமான அமைப்பில் சன்னதி அமைந்தது உள்ளது. அருகிலேயே நடராஜர் சன்னதியும் பக்கத்தில் பைரவர் சன்னதியும் உள்ளன.

சற்று தள்ளி வலப்புறம் நான்கு கரங்களுடன் சொர்ணாம்பிகை அம்பாள் நவமாதா பீடத்தில் எழில் கோலம் கொண்டு நிற்கிறாள் . அந்த பீடம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது விசேஷ தகவல் ஆகும்.

கன்வ மகரிஷி இங்கு தங்கி தவமியற்றி ஈசன் அருள் பெற்றதால் அவருக்கும் தனி சன்னதி உள்ளது. சுந்தர மூர்த்தி நாயனாரை மணந்த சங்கிலி நாச்சியார் இங்கு தான் பிறந்தார் என்பதால் அவருக்கும் சன்னதி உள்ளது.

சூரியனுக்கு சிறப்பான தலம் என்பதால் இங்கு நவக்கிரக சன்னதி இல்லை. கோயிலை அடுத்து சூரிய புஷ்கரணி தீர்த்தம் ததும்பும் தண்ணீருடன் உள்ளது. அழகிய படித்துறையுடன் சுத்தமாக பராமரித்த வருகின்றனர்.

ஆலய வளாகத்தில் அனேக பூமரங்கள் பூத்து குலுங்குகின்றன. அதிலும் மகிழமும் நாகலிங்கமும் வளர்ந்த தோங்கி நிற்கின்றன. அபூர்வமாக திருவோடு மரமும் இங்குள்ளது. ஞாயிறு தலம் சகலதோச நிவர்த்தி தலமாகும். புஷ்பரதேஷ்வரரை வழிபட சந்தோஷம் நிலைக்கும் என்பது நிஜம்.

வருடந்தோறும், சித்திரை மாதம் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை, சூரியனின் ஒளிக் கதிர்கள், சிவலிங்கம் மீதும் அம்பாள் சந்நிதியில் விழுகின்றன. இந்த நாளில், இறைவனை தரிசிப்பது பெரும்பலன் தரும் என்கின்றனர் பக்தர்கள். சித்திரை, தை மாதப் பிறப்புகள், ரத சப்தமி முதலான நாளில், சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறுகின்றன. என்றாலும் ஒவ்வொருவாரமும் ஞாயிறு கிழமையும் புஷ்பரதேஷ்வரர் கோயிலில் திருவிழா போல் பக்தர்கள் கூடுகின்றனர் . சூரியன் வணங்கிய ஈசனை நாமும் வணங்கி நலன் பெறுவோம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றத்திற்கும் அங்கிருந்து ஞாயிறு கிராமத்திற்கு நிறைய பஸ் வசதிகள் உள்ளன . சென்னை பாரிமுனையில் இருந்தும் ஞாயிறு கிராமத்திற்கு நேரடி பஸ் வசதிகள் உள்ளன.

-மு.ரா.சுந்தரமூர்த்தி

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews