கழிவுநீர் கால்வாய் இல்லாததால், வீட்டு தொட்டிகளில் கழிவுநீரை சேமிக்கும் அவலம்

 

கழிவுநீர் கால்வாய் இல்லாததால், வீட்டு தொட்டிகளில் கழிவுநீரை சேமிக்கும் அவலம்

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே கழிவுநீரை சேமித்து சாலையில் ஊற்றிவரும் அவலம் நீடித்து வருகிறது. வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 29 வார்டு பகுதி மருத்துவர் காலனியில் சுமார் 50 குடும்பங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், கடந்த பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் வசதி அமைக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, வீடுட்டின் முன்பு அமைக்கப்பட்ட தொட்டியில் சேமித்து, அதனை நாள்தோறும் சாலைகளில் ஊற்றி வருகின்றனர். இதனால் சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், பொதுமக்கள் அந்த கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் கால்வாய் இல்லாததால், வீட்டு தொட்டிகளில் கழிவுநீரை சேமிக்கும் அவலம்

இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வலியுறுத்தி, பலமுறை நகராட்சி அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். மேலும், இதனால் தங்கள் பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், நாள்தோறும் தங்கள் வீடுகளில் உள்ள கழிவுநீரை அகற்றவிட்டு தான் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே, தங்களின் சூழலை கருதி, நகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.