ஆரோக்கியமான முதுமைக்கு… தினமும் கொஞ்சம் வால்நட்!

 

ஆரோக்கியமான முதுமைக்கு… தினமும் கொஞ்சம் வால்நட்!

வால்நட்டை மூளைக்கான உணவு என்று பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் நான்கு – ஐந்து மாதங்களுக்கு வால்நட் எடுத்து வந்தால் குழந்தையின் மூளை செயல்திறன் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வால்நட்டில் உள்ள பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, வைட்டமின்கள், பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள் வால்நட்டை சூப்பர் உணவாக மாற்றியுள்ளது. மூளை செயல் திறன் மேம்பட மட்டுமல்ல… முதுமையில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வால்நட் அவசியம் என்கிறது ஆய்வு முடிவுகள்.

ஆரோக்கியமான முதுமைக்கு… தினமும் கொஞ்சம் வால்நட்!

வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைவாக உள்ளது. இது மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடண்டும் கூட. இது சில வகையான புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது. குறிப்பாக கணையம், மார்பகம், பிராஸ்டேட் புற்றுநோய்க்கான வாய்ப்பை வால்நட் குறைக்கிறது.

ஆரோக்கியமான இதய செயல்பாட்டுக்கு வால்நட் உதவுகிறது. இதில் உள்ள நுண் சத்துக்கள் உடலில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள L-arginine என்ற அமினோ அமிலம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ரத்தம் கட்டியாவதைத் தடுக்கிறது.

வால்நட்டில் கலோரி அதிகம். அதே நேரத்தில் கொஞ்சமாக எடுத்துக் கொண்டாலே வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு, உடல் எடையை பராமரிக்க அதே நேரத்தில் தேவையான ஊட்டச்சத்து இயற்கையான முறையில் பெற விரும்புகிறவர்களுக்கு வால்நட் நல்ல தேர்வாக இருக்கும்.

இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் பிரச்னையை போக்கும் ஆற்றல் வால்நட்டுக்கு உண்டு. இது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வந்து டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

இளமையில் முதுமை ஏற்படுவதைத் தடுக்கிறது, முதுமை காலத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க வால்நட் உதவுகிறது. முதுமை காலத்தில் வீட்டில் முடங்கிக்கிடக்காமல் மற்றவர்கள் போல சுதந்திரமாக வெளியே சென்று வரும் அளவுக்கு நம்முடைய உடலை வலிமைப்படுத்துகிறது வால்நட்.

ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி மற்றும் இயக்கத்தை மேம்படுத்தும் ஆற்றல் வால்நட்டுக்கு உண்டு. குழந்தையின்மைக்கான வாய்ப்பை இது குறைக்கிறது. இது தொடர்பாக 117 இளைஞர்களுக்கு தினமும் 75 கிராம அளவுக்கு வால்நட் அளித்து பரிசோதிக்கப்பட்டது. மூன்று மாத முடிவில் அவர்கள் விந்தணுக்களின் வடிவம், இடப் பெயர்வு, உயிரோடு இருக்கும் தன்மை மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளனர்.