வந்த பஸ்ஸை பயன்படுத்தாமல், கணக்குப் பார்க்கும் உ.பி அரசு! – கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

 

வந்த பஸ்ஸை பயன்படுத்தாமல், கணக்குப் பார்க்கும் உ.பி அரசு! – கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 1000 பஸ்களை ஏற்பாடு செய்வதாக அறிவித்தார். அப்படி அறிவிக்கப்பட்ட பஸ்களை உ.பி-க்குள் அனுமதிக்காமல் எவ்வளவு 1000ம் என்று குறிப்பிட்டதில் எத்தனை பஸ் வந்துள்ளது என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறது உ.பி அரசு.
கொரோனா ஊரடங்கு காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர்.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள், பத்திரிகையாளர்கள் பல முறை பிரச்னை எழுப்பிய நிலையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அதுவும் கையில் பணமில்லாமல் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களே பணம் தர வேண்டும் என்று கூறப்பட்டது. எதிர்ப்பு காரணமாக மத்திய – மாநில அரசுகளே இதற்கான செலவை ஏற்றக்கொள்வதாக அறிவித்தன. ஆனாலும், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறப்பு ரயில்களை இயக்காமல் போக்குகாட்டி வந்தது மத்திய பா.ஜ.க அரசு.

டெல்லியில் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அவதியுற்று வந்தனர். இவர்கள் சொந்த ஊர் திரும்ப 1000 பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்தார். ஆனால், அந்த பஸ்களின் நம்பர் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும், அதன் பிறகு அனுமதி அளிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று இழுத்தடித்தது உ.பி அரசு. நூற்றுக் கணக்கான பஸ்கள் தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல காத்திருந்த நிலையில், மூன்று நாட்களாக இழுத்தடிப்பு நடந்தது. இந்த நிலையில், பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்ததாக கூறியதில் பல, பஸ்ஸே இல்லை. ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் நம்பரை எல்லாம் பஸ் நம்பர் என்று கொடுத்துள்ளார்கள் என்று குறை கூறுவதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர் பா.ஜ.க-வினர்.

1000ம் பஸ்ஸை மத்திய, மாநில அரசு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். எதிர்க்கட்சி தன்னால் முடிந்த அளவுக்கு பஸ்ஸை ஏற்பாடு செய்துள்ளது. அது 800 ஆக இருந்தால் என்ன, 500 ஆக இருந்தால் என்ன… இருப்பதில் தொழிலாளர்களை ஏற்றி அனுமதிக்க வேண்டியதுதானே… ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்ஸில் குறை காண்பதை விடுத்து தொழிலாளர்கள் வீடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.