`தனியார் மருத்துவமனைகள் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுக்கிறது!’- கலெக்டருக்கு எம்பி எழுதிய கடிதம்

 

`தனியார் மருத்துவமனைகள் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுக்கிறது!’- கலெக்டருக்கு எம்பி எழுதிய கடிதம்

தனியார் மருத்துவமனைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன், கலெக்டருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட கலெக்டர் ராஜமானிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “சில தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களைப் பிரசவத்திற்கு அனுமதிக்கவில்லை என புகார்கள் வந்துள்ளது. மருத்துவமனை சார்பில் தெரிவிக்கும் காரணம் என்னவென்றால், இந்தப் பெண்கள் ஆரம்பத்தில் இருந்தே இங்கு சிகிச்சை பெறவில்லை.

இந்த நிலையில் நாங்கள் அவர்களின் உடல் நிலை அறியாமல் கையாண்டால் வரும் பிரச்னைகளை மருத்துவமனை எதிர்கொள்ள தயாராக இல்லை என்கிறார்கள். அதையும் மீறி கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சையளிக்க அழுத்தம் கொடுத்தால், படுக்கைகள் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் கூறுகிறார்கள். இதற்கு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய வசதிகள் இல்லாததே உண்மையான காரணம். இந்தப் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பிரச்சனைகள தீர்க்க வேண்டும். மேலும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா வார்டுகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.