முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய பிரதமர் மோடி!

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய பிரதமர் மோடி!

நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான நிவர் புயல் கடந்த 25ஆம் நள்ளிரவு 2 மணிக்கு மரக்காணம் – புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இந்த புயல் கடலோர மாவட்டங்களையும் புதுச்சேரியையும் கடுமையாக தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளில் களமிறங்கியது. மக்களை முகாம்களில் தங்க வைப்பது, முன்கூட்டியே மரங்களை வெட்டுவது, பேரிடர் மீட்புக் குழுவை வரவழைப்பது, நீர் வெளியேற்றும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதனால் தமிழகத்திற்கு பெரிதாக பொருட்சேதமும் உயிர் சேதமும் ஏற்படவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய பிரதமர் மோடி!

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன்
தொலைபேசியில் பேசிய போது பிரதமர் மோடி அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். நிவர் புயல் தாக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதல்வர் பிரதமர் மோடியிடம் விளக்கினார். அப்போது தமிழக அரசு மற்றும் தமிழக மக்களுக்கு அனைத்து வகையிலும் மத்திய அரசு உதவுவதாக பிரதமர் உறுதியளித்தார்.

முன்னதாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், பேரிடரால் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.