நெருக்கும் கூட்டணி கட்சிகள்- கறார் அதிமுக

 

நெருக்கும் கூட்டணி கட்சிகள்- கறார் அதிமுக

அதிமுக, திமுக என இரு பெரும் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழக தேர்தல் களம், இந்த முறை பலமுனை போட்டியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி எல்லா கட்சிகளும் கூட்டணி பேரத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை தொடங்கியுள்ளன. அதிகம் சீட்டுகள் கேட்டு அதிமுக தலைமையை கூட்டணி கட்சிகள் நெருக்கி வருவதாகவும், ஆனால் கட்சியின் வலிமைக்கு ஏற்பவே இடங்கள் தரப்படும் என்பதில் அதிமுக கறாராக இருப்பதாகவும் செய்திகள் சிறகடிக்கின்றன.

நெருக்கும் கூட்டணி கட்சிகள்- கறார் அதிமுக

மத்தியில் ஆளும் பாஜகவிற்கும், தமிழகத்தை ஆளும் அதிமுகவிற்கும் அரசியல் ரீதியாக நல்லுறவு நீடித்து வருகிறது. எடப்பாடி அரசின் செயல்பாடுகளை மத்திய அமைச்சர்களும், பிரதமர் மோடியும் பலமுறை பாராட்டியதுண்டு. அதேநேரம் இங்குள்ள பாஜக தலைவர்கள் சிலர் அதிமுகவை சீண்டிப் பார்க்கும் நோக்கத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ‘இது சீட்டு பேரத்தை அதிகரிப்பதற்கான உத்தி’ என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும் அதிமுக, ‘’ உங்கள் பலத்திற்கேற்ப 20 முதல் 25 இடங்கள் வரை ஒதுக்கப்படும். இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அப்புறம் உங்கள் இஷ்டம்’’ என செய்தி அனுப்பிவிட்டதாகத் தகவல்.

நெருக்கும் கூட்டணி கட்சிகள்- கறார் அதிமுக


இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் மாறிமாறி கூட்டணி அமைத்துள்ள பாமகவும் தன் பங்கிற்கு சீட்டுபேர சேட்டையை ஆரம்பித்துள்ளது. ‘’ 50 தொகுதிகளுக்குக் குறையாமல் வேண்டும். அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும்’’ என தைலாபுரம் தரப்பு முன்வைத்துள்ள கோரிக்கையை அதிமுக சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. பெரிய, சின்ன மருத்துவர்களின் பழைய வரலாற்றை நன்கு தெரிந்து வைத்திருக்கும் அதிமுக தலைமை,’’ அதிகபட்சம் 15 இடங்கள்தான்’’ என கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட, என்ன செய்வது என்கிற தவிப்பில் இருக்கிறதாம் பாமக.

நெருக்கும் கூட்டணி கட்சிகள்- கறார் அதிமுக


கேப்டன் முழுமையாக செயல்பட முடியாத நிலையில் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் காட்டிக் கொண்டிருக்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அதிகமான இடங்களுக்கும், தம்பி சுதீஷுக்கு ராஜ்யசபா சீட்டிற்கும் அடிபோடுகிறார். தேமுதிகவின் உண்மையான பலத்தை தெரிந்து வைத்திருக்கும் அதிமுக,’’ இரட்டை இலக்கத்தில் சீட் தருகிறோம். ராஜ்யசபா சீட் பற்றி இப்போதைக்கு உறுதி சொல்ல முடியாது’’ என அதிரடியாக சொல்லிவிட்டதாகக் கூறுகிறார்கள். பெரிய கட்சிகளுக்கே இந்த நிலை எனும்போது கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளைஅவற்றின் பலத்திற்கேற்ப அதிமுக தலைமை இந்த அளவிலேயே டீல் பண்ணுகிறதாம்.

நெருக்கும் கூட்டணி கட்சிகள்- கறார் அதிமுக

இது பற்றி கருத்து தெரிவித்த அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர், ’’எந்தவொரு கட்சியையும் நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அதேபோல மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுகவின் பலத்தையும், செல்வாக்கையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் 170 முதல் 180 இடங்களில் அதிமுக போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. இதற்கு ஏற்பவே கூட்டணி பங்கீடு அமையும். வெறுமனே அதிக இடங்களில் போட்டியிடுவதா, இல்லை குறைந்த இடங்களில் போட்டியிட்டாலும் அத்தனையும் வெற்றிபெறக் கூடிய தொகுதிகளாக இருப்பது நல்லதா? என்பதை அடம் பிடிக்கும் கூட்டணி கட்சிகள்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.