கோவைக்கு சென்ற ஜனாதிபதியை வரவேற்ற அமைச்சர்கள்!

 

கோவைக்கு சென்ற ஜனாதிபதியை வரவேற்ற அமைச்சர்கள்!

சென்னையிலிருந்து கோவைக்கு சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை அமைச்சர்கள், ஆளுநர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவும் கலைஞர் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழாவும் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னைக்கு வந்தார். நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் சென்னைக்கு வந்தடைந்த ராம்நாத் கோவிந்த் கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்த பின்னர் மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகம் வந்தார்.

கோவைக்கு சென்ற ஜனாதிபதியை வரவேற்ற அமைச்சர்கள்!

அங்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்று கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் மீண்டும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற குடியரசு தலைவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டார். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி, சாமிநாதன் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை வரவேற்றனர்.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட குடியரசு தலைவர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சென்றடைந்தார். அங்கு மூன்று நாட்கள் தங்கி ஓய்வெடுத்த பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மீண்டும் டெல்லிக்கு திரும்புகிறார்.