கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதியில் கருவுற்ற யானை ஒன்று பசியுடன் சுற்றி திரிந்துள்ளது. இதனால் அந்த யானை பசி தாளாமல் ஊருக்குள் வந்துள்ளது. அங்கு மனிதர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டுள்ளது. அப்போது சிலர் அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைத்து யானைக்கு சாப்பிட கொடுத்துள்ளனர். யானை அதை சாப்பிட முயன்ற போது அந்த வெடிமருந்து வாயிலேயே வெடித்துள்ளது.
இதனால் பலத்த காயமடைந்த யானை வலி தாங்க முடியாமல் அங்கிருந்து மீண்டும் காட்டுக்குள் ஓடியுள்ளது. இருப்பினும் வலி தாங்க முடியாமல் ஆற்றில் இறங்கி நின்றுள்ளது. இதை அறிந்த வனத்துறையினர் இரண்டு யானைகளின் உதவியுடன் அதனை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் யானை பரிதாபமாக பலியானது.
இந்த தகவல் இணையத்தில் கேரள வனத்துறை அதிகாரி ஒருவரால் பதியப்பட்ட நிலையில் பலரும் யானையை கொன்றவர்களுக்கு உரிய தண்டனை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். மனிதர்கள் ரூபத்தில் வாழும் இதுபோன்ற மிருகங்கள் தான் உண்மையில் காட்டில் இருக்க வேண்டியவர்கள் என்று பலரும் ஆதங்கத்துடன் கூறி வருகிறார்கள்.