சரும நோய்களுக்கு மருந்தாகும் பூவரசம்பட்டை!

 

சரும நோய்களுக்கு மருந்தாகும் பூவரசம்பட்டை!

பூவரசு… பசுமை மாறாத இந்த மரத்தின் இலைகள் எப்போதும் பளிச்சென்று காணப்படும். வெட்ட வெட்ட தழைத்தோங்கும் இந்த மரத்தின் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும் தழை எருவாகவும் பயன்படுகிறது. அதேநேரத்தில் மனிதர்களைப் பாடாய்ப்படுத்திவரும் தோல் நோய் மற்றும் வயிறு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தக்கூடியது.

சினிமா பாடல்…
பூவரசம் பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு... காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?' என்ற திரைப்படப் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கும். இந்தப் பாடல் வரியின் நடுவே,நடப்பதோ மார்கழி மாசம், தையிலே நிச்சயதார்த்தம் நாதஸ்வரம் மேளம் வரும்’ என்ற வரிகளும் இடம்பெற்றிருக்கும். இந்தப் பாடல் வரிகள் வெறும் வரிகளாக இல்லாமல் சில விஷயங்களை மறைமுகமாக சொல்லிச் சென்றிருக்கின்றன.

சரும நோய்களுக்கு மருந்தாகும் பூவரசம்பட்டை!

பூவரசு பூக்கள் பூத்துக் குலுங்கும் இந்த காலகட்டத்தில் அவற்றிலுள்ள மகரந்தத்தை எடுத்துச் செல்ல தேனீக்கள் கூட்டம் கூட்டமாக வரும். மகரந்தச் சேர்க்கை நடைபெற இந்தக் காலம் உகந்த காலம். அதனால், இந்த காலகட்டத்தில் திருமணம் செய்வது உகந்தது என்பதை இந்தப் பாடல் வரிகளில் சொல்லியிருப்பார்கள்.

பீப்பீ…
பூவரசு இலைகளில் பீப்பீ செய்து வாயால் ஊதி விளையாண்டனர் கடந்த தலைமுறைப் பிள்ளைகள். விளையாட்டாகச் செய்தாலும் அந்த இலையை வாயில் வைப்பதால் அதிலுள்ள மருத்துவக் குணங்கள் அவர்களுக்குக் கிடைக்கும். அதேபோல் பூவரசு இலையில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவார்கள். இன்றைக்கும் கிராமங்களில் பூவரசு இலைகளில் கொழுக்கட்டை செய்வது வாடிக்கை.

பூவரசு இலைகளுக்கு நிறைய மருத்துவக்குணங்கள் உண்டு. இதன் இலையை அரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் நோய்களுக்குப் பூசினால் பலன் கிடைக்கும். இலையை அரைத்துச் சூடாக்கி வீக்கங்களின்மீது கட்டினாலும் பலன் கிடைக்கும். சருகாகிப்போன இலைகளை தீயில் எரித்து அதன் சாம்பலையும்கூட தோல் நோய்களுக்குப் பூசி குணமடையலாம்.

ஒற்றைத் தலைவலி…
பூக்களை அரைத்து சிரங்குகளின்மீது பூசினாலும் குணம் கிடைக்கும். பூவரசு காய்களில் உள்ள மஞ்சள் நிற பால் சரும நோய்களுக்கும் எச்சில் தழும்புகளுக்கும் பூசி குணம் பெறலாம். மூட்டுகளில் வரும் வீக்கத்துக்கும்கூட இதை பற்று போடலாம். ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் பூவரசு காய்களின் சாற்றைப் பூசினால் பலன் கிடைக்கும்.

சரும நோய்களுக்கு மருந்தாகும் பூவரசம்பட்டை!

பூவரசு மரத்தில் அதன் பட்டைகளுக்கு சிறப்பான மருத்துவக்குணங்கள் உள்ளன. இதன் பட்டைகளை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தோல் நோய்களுக்குப் பூசி பலன் பெறலாம். அதேபோல் பட்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றியதும் வடிகட்டிக் குடித்தால் வயிறு கழியும். இதனால் காணாக்கடி, நஞ்சு, பெருவயிறு, வீக்கம் போன்றவை சரியாகும்.

முதிர்ந்த பட்டையை அரைத்துப் பூசுவது மற்றும் தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து உதட்டில் வரும் வெண்புள்ளியில் பூசினால் பிரச்சினை சரியாகும். வைட்டமின் குறைபாட்டால் வரும் இந்தப் பிரச்சினைகளை சரிசெய்ய பூவரசம் பட்டை உதவும்.