பெற்றோரை இழந்து தவித்த ஏழைச் சிறுவன்… இலவசமாக கல்வி பயில உதவிய ஆட்சியர்!

 

பெற்றோரை இழந்து தவித்த ஏழைச் சிறுவன்… இலவசமாக கல்வி பயில உதவிய ஆட்சியர்!

விருதுநகர்

திருச்சுழி அருகே பெற்றோரை இழந்த மாணவருக்கு, இலவசமாக கல்வி பயில நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, அந்த மாணவருக்கு செல்போனை பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் குரவை குளம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிச் செல்வன்(13). இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவரது தாயாரும் கடந்த ஜீன் மாதம் உடல்நல குறைவினால் உயிரிழந்தார். இதனால் ஆதரவற்ற நிலையில் உள்ள சிறுவனை, அவரது பாட்டி பூமி பராமரித்து வருகிறார். இதனிடையே, வருமானம் இல்லாததால் கல்வி பயில முடியாமல் தவித்து வந்த சிறுவன், தனது படிப்பிற்கு உதவக்கோரி மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் மனு அளித்திருந்தார்.

பெற்றோரை இழந்து தவித்த ஏழைச் சிறுவன்… இலவசமாக கல்வி பயில உதவிய ஆட்சியர்!

இந்த மனு குறித்து சம்பந்தப்பட்ட மாணவரின் நிலை குறித்து வருவாய் துறை மூலம் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டதில், அவரது ஆதரவற்ற சூழல் தெரிய வந்தது. இதனை அடுத்து, அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி கட்டணம், விடுதி கட்டணம் ஏதுமின்றி மாணவர் வெற்றிச்செல்வன் கல்வியை தொடர நடவடிக்கை மேற்கொண்டார். தொடர்ந்து, நேற்று மாணவர் வெற்றிச்செல்வன், அவரது பாட்டி பூமியை நேரில் அழைத்து ஆட்சியர் மேகநாதரெட்டி, மாணவர் ஆன்லைன் வகுப்பில படிப்பதற்கு வசதியாக செல்போன் ஒன்றை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

மேலும், அவருக்கு டிக்சனரி மற்றும் பொது அறிவு புத்தகங்களை பரிசளித்த ஆட்சியர், சிறப்பாக கல்வி பயின்று நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொண்டு, பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென மாணவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தனது கல்வியை தொடர உதவிய ஆட்சியருக்கு மாணவர் வெற்றிச் செல்வனும், அவரது பாட்டியும் மகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.