காக்கும் கதிரவனை கரமெடுத்து கும்பிடவைக்கும் ‘பொங்கல் பண்டிகை’

 

காக்கும் கதிரவனை கரமெடுத்து கும்பிடவைக்கும் ‘பொங்கல் பண்டிகை’

உலகங்களின் இயங்குவதற்கு காரண கர்த்தாவாக இருக்கும் கதிரவனை ஒருநாளாவது நினைக்க வேண்டும், வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக தோன்றிய பண்பாடு தான் பொங்கல் பண்டிகை. விவசாய பெருகுடி மக்கள் தமது உழைப்பிற்கும் வேளாண் தொழிலுக்கும் உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.  இப்படிதான் தைப்பொங்கல் பண்டிகை மலர்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்துள்ள பொங்கல் இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது.

காக்கும் கதிரவனை கரமெடுத்து கும்பிடவைக்கும் ‘பொங்கல் பண்டிகை’

தமிழர் திருநாளான பொங்கல் அறுவடை முடிந்தவுடனேயே கிராமங்களில் களைகட்டத் தொடங்கிவிடும். அவரவர் வயல்களில் விளைந்த நெல் மணிகளை இடித்து முறத்தால் புடைத்து பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசியை தயார் செய்வர். 10 நாட்களுக்கு முன்பே பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கிவிடும். களிமண்ணையும், வண்டல் மண்ணையும் குழைத்து உருவாக்கப்பட்ட சுவர்களையும், தரையையும், அடுப்புகளையும் கொண்ட கூரை வீடுகளை, பெண்கள் கூட்டிச் சுத்தப்படுத்தி, சாணத்தால் மொழுகி, அந்த அடுப்பில் பொங்கல் வைப்பர். இதில் முக்கியமானது என்னவென்றால் மண்ணாலான பொங்கல் பானையைச் சுத்தமாகக் கழுவி அதைச் சுற்றிலும் அழகாகக் கோலமிட்டு மஞ்சள் கொத்து, கரும்பு, பனங்கிழங்கு, கண்ணுப்புள்ளப்பூ, ஆவாரம்பூ, கதம்பம் ஆகியவற்றைக் கட்டி, நல்ல நேரம் பார்த்து, அடுப்பின் மேல்பானையை வைப்பார்கள். அதன் பின்னர் பச்சரிசியை களைந்து, அக்கழனித்தண்ணீரை வைத்து பொங்கல் வைப்பர்.

காக்கும் கதிரவனை கரமெடுத்து கும்பிடவைக்கும் ‘பொங்கல் பண்டிகை’

பால் எப்போது பொங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரும் காத்துக்கொண்டிருப்பர். பால் பொங்கும் நேரத்தில் வலம்புரி சங்கு ஊதி, வெண்கல மணியை அடித்து மங்கல ஓசையை எழுப்புவார்கள். அதன்பின் வாயில் குளவையிடுவர். அதனையடுத்து பொங்கலோ பொங்கல் என்று அனைவரும் உற்சாகமாக கூறுவர். அதன் பின்  பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், முந்திரி, கிஸ்மிஸ்பழம், ஏலம் சுக்கு, நெய் ஆகிய பொருட்களை பானையிலிட்டு, நன்றாகப் பொங்கல் வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி கதிரவனுக்கு படைத்த பின்பு கூட்டாக உட்கார்ந்து அனைவரும் பொங்கல் சாப்பிடுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த் பொங்கல் இன்றும் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் கொண்டாடப்படுகிறது.