என் நிகழ்ச்சியில் வேடிக்கை இல்லையா? அப்பம் சிரிக்காதீங்க.. 2 இந்தியா சர்ச்சை புகழ் வீர் தாஸ் பதிலடி

 
வீர் தாஸ்

என் நிகழ்ச்சியில் நீங்கள் வேடிக்கையை காணவில்லை என்றால் சிரிக்காதீர்கள் என்று 2 இந்தியா சர்ச்சை புகழ் வீர் தாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல நடிகரும், காமெடியனுமான வீர் தாஸ் அண்மையில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜான்  எப் கென்னடி சென்டரில் நடந்த தனது சமீபத்திய நிகழ்ச்சியின் ஒரு பகுதியின் வீடியோவை  டிவிட்டரில் பதிவேற்றம் செய்து இருந்தார். அந்த வீடியோவில், நான் இரண்டு இந்தியாவிலிருந்து வருகிறேன். அங்கு (இந்தியா) நாங்கள் பகலில் பெண்களை வணங்குகிறோம், இரவில் அவர்களை கும்பல் கற்பழிக்கும் என்று மிகவும் இழிவான வகையில் பேசியிருந்தார். இது நம் நாட்டில் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நரோட்டம் மிஸ்ரா

மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எங்க மாநிலத்தில் வீர் தாஸ் நிகழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம் என்று ஆவேசமாக தெரிவித்தார். இந்நிலையில் நியூயார்க் நகரில் வீர் தாஸ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் என் வேலையை செய்ய இங்கே இருக்கிறேன். தொடருவேன், நிறுத்த மாட்டேன். மக்களை சிரிக்க வைப்பதே எனது வேலை. நீங்கள் அதில் வேடிக்கையை காணவில்லை என்றால் சிரிக்காதீர்கள்.

வீர் தாஸ்

சிரிப்பு ஒரு கொண்டாட்டம் என்று நான் நினைக்கிறேன். சிரிப்பும், கைதட்டல்களும் ஒரு அறையை நிரப்பும்போது அது பெருமையின் தருணம். நகைச்சுவை உணர்வுள்ள, அல்லது நையாண்டியை புரிந்து கொள்ளும் அல்லது எனது முழு வீடியோவை பார்க்கும் எந்தவொரு இந்தியருக்கும் அந்த அறையில் என்ன நடந்தது என்று தெரிந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒரு கலைஞராக நீங்கள் எல்லா வகையான கருத்துகளையும் பெறுவீர்கள். ஆனால் மில்லியன் கணக்கான மக்கள் என் நிகழ்ச்சிக்காக எனக்கு அன்பை கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.