நாடாளுமன்றம் விவாதத்துக்கானது, காகிதங்களை கிழிப்பதற்கு அல்ல.. எதிர்க்கட்சியினரை மறைமுகமாக சாடிய அனுராக் தாக்கூர்

 
அனுராக் தாக்கூர்

நாடாளுமன்றம் என்பது விவாதத்துக்கானது, காகிதங்களை கிழிப்பதற்கும், மேசைகளில் நடனமாடுவதற்கும் அல்ல. அதை சாலைகளில் செய்யலாம் என்று எதிர்கட்சிகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சாடினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்றம் என்பது விவாதத்துக்கானது, காகிதங்களை கிழிப்பதற்கும், மேசைகளில் நடனமாடுவதற்கும் அல்ல என்று மறைமுகமாக எதிர்க்கட்சிகளை  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தாக்கியுள்ளார். இமாச்சல பிரதேசம் சிம்லாவில் சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்  மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்  கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:  சட்டமன்றங்களில் தரமான விவாதங்கள் அவசியம். விவாதங்களின் தரத்தை மேலும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாடாளுமன்றம் என்பது விவாதத்துக்கானது, காகிதங்களை கிழிப்பதற்கும், மேசைகளில் நடனமாடுவதற்கும் அல்ல. அதை சாலைகளில் செய்யலாம். 

சோம்நாத் சட்டர்ஜி
பல்கலைக்கழக மாணவர்களை சட்டப்பேரவைகளுடன் தொடர்புபடுத்துவது குறித்து சபாநாயகர்கள் பரிசீலிக்க வேண்டும். இதனால் அவர்கள் ஆராய்ச்சியின் தரத்தை உயர்த்த முடியும். மக்களவையில் நான் முதல் முதலாக உரையாற்றிய போது, அப்போதைய சபாநாயகர்  சோம்நாத் சட்டர்ஜி எனக்கு நம்பிக்கை அளித்தார் மேலும் அவையில் சுமூகமான சூழல் நிலவுவதையும் அவர் உறுதி செய்தார். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், தேசிய மற்றும் மனித நலன்கள் தொடர்பான 75 தலைப்புகள் நாடாளுமன்ற விவாதத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம்

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அண்மையில், இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 29ம் தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடத்த ஒப்புதல் அளித்தது. மேலும் கூட்டத்தொடரை கூட்டுவதற்கான பரிந்துரையை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்துக்கு அனுப்பியது. இம்மாதம் 29ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரையிலான 25 தினங்களில் மொத்தம் 19 அமர்வுகள் அவைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.