சோதனை என்ற பெயரில் பெண்களை பி.எஸ்.எப். வீரர்கள் தவறாக தொடுகிறார்கள்.. திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

 
 உதயன் குஹா

எல்லையை தாண்டு பெண்களை சோதனை என்ற பெயரில் பி.எஸ்.எப். வீரர்கள் தவறாக தொடுகிறார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பி.எஸ்.எப். எல்லை அதிகார வரம்பு அதிகரிப்பு எதிராக  திரிணாமுல் காங்கிரஸ் தீர்மானம் கொண்டு நிறைவேற்றியது. முன்னதாக இது தொடர்பான விவாதத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் பேசுகையில், பி.எஸ்.எப். வீரர்கள் சோதனை என்ற பெயரில் பெண்களை தவறாக தொடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். இதனால் மேற்கு வங்க சட்டப்பேரவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பி.எஸ்.எப். அதிகார வரம்பு அதிகரிப்பு எதிரான தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உதயன் குஹா பேசுகையில், பெண்கள் எல்லைகளை தாண்டும்போது, சோதனை என்ற பெயரில் பி.எஸ்.எப். வீரர்கள் அவர்களை தகாத முறையில் தொடுகிறார்கள். பாரத் மாதா கி ஜெய் என்று எவ்வளவு சொன்னாலும் பரவாயில்லை, அவர்களால் தேசபக்தியுடன் இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

பி.எஸ்.எப். பெண்கள் பிரஹாரிகள்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டை பி.எஸ்.எப். அதிகாரி மறுத்துள்ளார். இது தொடர்பாக அந்த அதிகாரி கூறுகையில், பி.எஸ்.எப். என்பது ஒரு தொழில்முறை படையாகும். இது விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் எப்போதும் கட்டளையிடப்பட்ட கடமைகளை செய்கிறது. பி.எஸ்.எப். பெண்கள் பிரஹாரிகள்  பெண்களை சோதனை செய்வார்கள். பி.எஸ்.எப். வீரர்கள் பெண்களை தகாத முறையில் தொடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்தார்.