ஆந்திராவில் புதிய திருப்பம்.. 3 தலைநகரங்கள் உருவாக்கும் மசோதாவை திரும்ப பெற்றது ஜெகன் மோகன் ரெட்டி அரசு

 
3 தலைநகரம் அமைவிடம்

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் உருவாக்கும் மசோதாவை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாபஸ் பெற்றார். அதேசமயம்  தவறுகள் இல்லாத புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவோம் என்று ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

ஆந்திர பிரதேசம் பிரிவினைக்கு பிறகு தெலங்கானா, ஆந்திரா என இரண்டானது. ஆந்திர மாநிலத்துக்கு கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதியை தலைநகராக அப்போது முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மேலும் அங்கு அதற்கான வசதிகள் உருவாக்குவதற்காக விவசாயிகளிடமிருந்து நிலங்களை அரசு வாங்கியது. மேலும் பிரம்மாண்டமான சட்டப்பேரவை வளாகம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

அமராவதி

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு,  நிர்வாக வசதிக்காக அமராவதியோடு, விசாகப்பட்டிணம், கானூலையும் சேர்த்து மாநிலத்தில் மொத்தம் 3 தலைநகரங்களை அமைக்க முடிவு செய்தது. மேலும் 2020 ஜூன் மாதத்தில் இது தொடர்பாக ஆந்திர பிரதேசம் பரவலாக்கம் மற்றும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி மசோதா 2000ஐ மாநில சட்டப்பேரவையில் ஜெகன் மோகன் அரசு நிறைவேற்றியது. ஆனால் எதிர்க்கட்சிகள் பலமாக உள்ள சட்ட மேலவையில் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதேபோல் அமராவதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தை ரத்து செய்வதற்கான மசோதாவையும் மேலவையில் நிறைவேற்ற முடியவில்லை. 

ஜெகன் மோகன் ரெட்டி

அதேவேளையில் அமராவதியில் தலைநகரம் அமைவதற்காக 34 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை விட்டுக் கொடுத்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், 3 தலைநகரங்கள் மசோதாவுக்கு எதிராக சுமார் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனால் ஜெகன் மோகன் ரெட்டியால் அடுத்து துணிந்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று ஆந்திர பிரதேச அரசு மாநில சட்டப்பேரவையில் ஆந்திர பிரதேசம் பரவலாக்கம் மற்றும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி மசோதா 2000ஐ திரும்ப பெறுவதற்கான முன்மொழிவை முன்வைத்தது. அதை தொடர்ந்து அந்த மசோதாவை ரத்து செய்வதற்கான முன்மொழிவை சபை நிறைவேற்றியது. சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசுகையில், ஆந்திராவில் மூலதன பரவலாக்கம் மிகவும் அவசியம் என்று நாங்கள் நம்பினோம். முன்பு அறிமுகப்படுத்திய மசோதாவை அரசு திரும்ப பெறப் போகிறது. பிழைகள் இல்லாத புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.