பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணிக்கு யார் தலைவர் என்பது பிரச்சினை இல்லை... சரத் பவார்

 
சரத் பவார்

பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணிக்கு யார் தலைவர் என்பது பிரச்சினை இல்லை ஆனால் மக்களுக்கு மாற்று வழி வழங்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். 

பா.ஜ.க.வுக்கு எதிராக மற்றும் அந்த கட்சிக்கு மாற்றாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து  ஒரு மெகா கூட்டணியை உருவாக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பெரும் முயற்சி எடுத்து வருகிறார். எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க தயாராக இருக்கின்றன ஆனால் யார் தலைமை என்பதில்தான் எதிர்க்கட்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. நாட்டை நீண்ட காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கோ தாங்கள்தான் தலைமை ஏற்க வேண்டும் என்று நினைக்கிறது.

பா.ஜ.க.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசோ தாங்கள்தான் பா.ஜ.க.வுக்கு சரியான மாற்று என்று கூறி வருகிறது. குறிப்பாக கடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட பிறகு, மம்தா பானர்ஜி தனது  தலைமையின்கீழ் அனைத்து எதிர்க்கட்சிகளை இணைத்து கூட்டணி உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.  இந்நிலையில் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணிக்கு யார் தலைவர் என்பதில் பிரச்சினை இல்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணிக்கு யார் தலைவர் என்பது பிரச்சினை இல்லை. இன்று ஒரு வாய்ப்பை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. அதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற பல்வேறு கட்சிகளின் ஆதரவை பெறுவோம். எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கூட்டணி குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.