நிதிஷ் குமார் பொய் சொல்லி பீகார் மக்களை ஏமாற்றுகிறார்.. ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றச்சாட்டு

 
நிதிஷ் குமார்

பீகாரில் குற்ற விகிதம் அதிகரித்து விட்டது, நிதிஷ் குமார் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது.


பீகாரின் மதுபானி மாவட்டத்தில் பத்திரிகையாளரும், சமூக நல ஆர்வலருமான ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த மாநிலத்தில் இந்த மாத தொடக்கத்தில் போலி மது அருந்தியதால் 32 பேர் பலியாகினர். இந்த சம்பவங்களை குறிப்பிட்டு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை ராஷ்டிரிய ஜனதா தளம் விமர்சனம் செய்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா கூறியதாவது: முதல்வர் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார், தவறாக வழிநடத்துகிறார். 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று முதல்வரானார் நிதிஷ் குமார். முதல்வர் கையில் எதுவும் இல்லாததே காரணம். அவரிடம் கட்டுப்பாடு இல்லை, அமைச்சர்கள் கூட முதல்வர் சொல்வதை கேட்கவில்லை, மாநிலத்தின் நிலை இதுதான். 

மனோஜ் ஜா

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்.சி.ஆர்.பி.) தரவுகளை எதிர்க்கட்சிகள் தயாரிக்கவில்லை. என்.சி.ஆர்.பி. தரவுகளை பார்த்தால் பீகாரின் குற்றவிகிதம் என்னவென்று முதல்வர் தெரிந்து கொள்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் முதல்வர் நிதிஷ் குமாரோ மாநிலத்தில் குற்றம் விகிதம் குறைந்துள்ளதாக கூறுகிறார். முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: மதுவிலக்குக்கு நான் உத்தரவிட்டதால் சிலர் எனக்கு எதிராக மாறியுள்ளனர். நான் அதில் தீவிரமாக உள்ளேன். அதை எதிர்ப்பவர்கள் வருத்தப்படுகிறார்கள்.

மது விலக்கு

அது வேறு விஷயம். அவர்கள் சொந்த கருத்தை கொண்டிருக்கலாம். ஆனால் நாங்கள் மக்கள் (ஆண்களும், பெண்களும்) சொல்வதை கேட்டோம். நான் மதுவுக்கு எதிராக நிற்கிறேன். குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. ஏதாவது நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நிர்வாகமும், காவல்துறையும் சுறுசுறுப்பாக செயல்பட்டு எங்கு ஏதாவது நடந்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.